;
Athirady Tamil News

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்!!

0

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதற்காக கோவில் வளாகத்திலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் மின் விளக்கு அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜல விநாயகர் கோவில் அருகில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் கலை அரங்கம் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் வரிசைகளில் சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தற்போது கோவிலுக்குள் பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் புதிதாக மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

கோவில் நுழைவு வாயிலில் இருந்து தட்சிணாமூர்த்தி சன்னதி வரை உள்ள வரிசை, மற்றொரு வரிசையுடன் இணைவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த முறை அது போன்று நடக்காமல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சொர்ணமுகி ஆற்றில் நடக்க உள்ள திரிசூல ஸ்நானம் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். மகா சிவராத்திரி உற்சவத்திற்கு முன்பு வருகிற 5-ந் தேதி மாசி மாத பவுர்ணமி அன்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து திரிசூலத்தை வேத பண்டிதர்கள் சாஸ்திர பூர்வமாக சொர்ணமுகி ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, திரிசூல ஸ்நானம் நடத்துகிறார்கள்.

கடந்த ஆண்டு வரை சொர்ணமுகி ஆற்றின் கரையோரத்தில் சிறு பகுதியில் பக்தர்கள் புனித நீராடுதலுக்காக தண்ணீர் குட்டையை அமைத்தர். இந்த ஆண்டும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தண்ணீர் குட்டை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி அறிவுரை வழங்க உள்ளார். விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு பேசியதாவது:- இந்த ஆண்டு நடக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும். பிரம்மோற்சவ விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். சிவன் கோவில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை ஒவ்வொருவரும் தங்களின் வீட்டு விழாவாக கருதி செயல்பட வேண்டும். விழாவின்போது பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மகா சிவராத்திரி அன்று சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வி.ஐ.பி.பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம், தோரண வாயில் அமைக்கப்பட வேண்டும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்கப்படும். வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை முன்கூட்டியே சீரமைத்துக் கொள்ள வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பிரம்மோற்சவ விழாவை வெற்றிகரமாக நடத்த அதிகாரிகளுக்கு, பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கோவில் துணை நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், பொறியியல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.