சமூக வலைதளங்களில் தன்னைபோல் தோற்றம் அளிக்கும் பெண்ணை தேடி கண்டுபிடித்து கொலை செய்த இளம்பெண்!!
தெற்கு ஜெர்மனியில் உள்ள முனிச் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஷராபன். இவரது காதலன் ஷேகிர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷராபன் தலைமறைவாக இருக்க விரும்பி உள்ளார். இதற்காக அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் உதித்துள்ளது. அதாவது தன்னை போல தோற்றம் அளிக்கும் ஒரு பெண்ணை சமூக வலைதளங்களில் தேடி உள்ளார். அப்போது முனிச் பகுதியில் வசிக்கும் அல்ஜீரியாவை சேர்ந்த கதீஜா (23) என்ற இளம்பெண்ணை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்துள்ளார்.
கதீஜாவும் தன்னை போலவே தோற்றம் அளிப்பதை உறுதி செய்த ஷராபன், அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னிடம் அழகு கிரீம்கள் இருப்பதாகவும், அதனை உங்களுக்கு தருகிறேன் எனவும் ஆசைகாட்டி கதீஜாவை நேரில் சந்திக்க அழைத்துள்ளார். அதை நம்பி கதீஜா சென்ற போது ஷராபனும் அவரது காதலரான ஷேகிரும் சேர்ந்து கதீஜாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் கதீஜாவை கத்தியால் சரமாரியாக 50 முறைக்கு மேல் குத்தி கொலை செய்துள்ளனர்.
பின்னர் கதீஜா உடலை சாக்கு பையில் கட்டி காரில் மறைத்து வைத்துவிட்டு ஷராபன் காதலனுடன் தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே ஷராபனை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தேடிய போது அங்குள்ள காட்டு பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காருக்குள் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பினர். முதலில், காரில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஷராபன் என அவரது பெற்றோர் கருதினர்.
ஆனால் டி.என்.ஏ. பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது அல்ஜீரியாவை சேர்ந்த கதீஜா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஷராபன் தலைமறைவாக இருப்பதற்காக காதலனுடன் சேர்ந்து கதீஜாவை கொலை செய்ததும், பின்னர் காதலனுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.