தீவகத்தில் நோயாளிகள் இறக்கும் அபாயம்!!
துரித நோயாளர் காவு வாகனம் ( அம்புலன்ஸ் ) இன்மையால் நெடுந்தீவு,நயினாதீவு, புங்குடுதீவு மக்கள் இறக்கும் நிலை என்கிறார் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளவாறு
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கென்று 2017 ல் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினூடாகவே நயினாதீவு, நெடுந்தீவு பிரதேசத்தில் வாழ்கின்ற நோயாளிகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில் மேற்படி வாகனமானது கடந்த ஏழு மாதங்களாக பழுதடைந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள வாகன திருத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 25 கிலோமீற்றர் தூரத்திலமைந்துள்ள ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்குரிய அம்புலன்ஸ் வண்டியினையே அவசர தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. அவசர சிகிச்சைக்குரிய நோயாளிகள் பல மணித்தியாலங்கள் கடந்து காத்திருந்தும் அம்புலன்ஸ் வருமா என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அவலநிலை தொடர்ந்தவண்ணமுள்ளது.
அதேவேளையில் ஊசி மருந்துகள், சேலைன் போன்றவற்றுக்குமான பாரிய தட்டுப்பாடு புங்குடுதீவு வைத்தியசாலையில் தொடர்ச்சியாக நிலவிவருகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு சிங்கள மொழி தெரிந்த மருத்துவர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்படுகின்றனர். மொழி தெரியாமல் மருத்துவரும், நோயாளிகளும் திண்டாடும் துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது. 2016 இல் புங்குடுதீவு உலகமையத்தினரும் கனடா – புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினரும் இணைந்து பல லட்ச ரூபாய் நிதியுதவியில் நோயாளிகளுக்கான கட்டில்கள், மின்விசிறிகள், மருத்துவ உபகரணங்கள் , வைத்தியருக்கான ஆசனங்கள் போன்றவற்றை வழங்கியிருந்தனர் . அத்தோடு நோயாளர் தங்குமிடத்துக்கும் முழுமையாக வர்ணம் பூசப்பட்டது .
அதே போன்று எனது தனிப்பட்ட நிதியுதவி ஊடாகவும் பல்வேறு சமூக ஆர்வலர்களினதும் தனிப்பட்ட நிதியுதவியூடாகவும் இவ் வைத்தியசாலைக்கு பல உதவிகள் வழங்கப்பட்டபோதிலும் தற்போதுள்ள வைத்தியர்கள் நோயாளிகளை அங்கு தங்க வைத்து பராமரிப்பதில்லை . கடுமையான சுகவீனம் என்றாலும் பனடோல் போன்ற மருந்துகளைக் கொடுத்துவிட்டு சுய விருப்பத்தின் வீடு செல்வதாக ஒரு படிவத்தின் கீழ் கையொப்பம் பெற்றுவிட்டு வீடுகளுக்கு அனுப்பும் அவல நிலை தொடர்ந்தவண்ணமுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அண்மையில் கடும் சுகவீனம் காய்ச்சல் காரணமாக ஒரு பாடசாலை மாணவி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்மயங்கி வீழ்ந்த நிலையிலேயே அங்கு சென்றுள்ளார். ஆனால் அவரை அங்கு தங்கவைத்து பராமரிக்கவோ அல்லது யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பாமலே சில மருந்து மாத்திரைகளை மாத்திரம் வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். கடந்த காலங்களில் சாதாரண நோய் என்றாலும் மருத்துவரும் தாதிமாரும் அக்கறையோடு தங்கவைத்து சிகிச்சை வழங்கிய நிலை காணப்பட்டு வந்ததுடன் நோயாளியின் நிலை கவலைக்கிடமென்றால் உடனடியாக அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பும் நிலை சீராக பேணப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை பேணப்படுவதில்லையென்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த பாடசாலை மாணவி அடுத்தநாள் காலை எட்டு மணிக்கு இந்த வைத்தியசாலைக்கு சென்றிருக்கிறார். ஆனால் மாலை மூன்று மணியாகியும் அவரை ஏற்றுவதற்கு அம்புலன்ஸ் வருகைதந்திருக்கவில்லை அன்றையதினம் , கொடிய விசத்தன்மையுடைய பாம்பு தீண்டிய நோயாளியொருவரும் இவ்வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தபோதிலும் மாலை நான்கு மணியளவிலேயே மேற்படி நோயாளர்களை ஏற்றிச்செல்வதற்காக ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்குரிய அம்புலன்ஸ் வண்டி வருகை தந்திருந்தது.
பாராளுமன்ற தேர்தலில் தீவகத்தில் அதிக வாக்குகளை பெற்று கடந்து மூன்று ஆண்டுகளாக மத்திய அமைச்சராக செயற்படும் டக்ளஸ் தேவானந்தவும் இதுவரை காலமும் வைத்தியசாலையை எட்டிப்பார்க்கவுமில்லை. ஆனால் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடும் நிமித்தம் அண்மையில் தனது படையோடு புங்குடுதீவுக்கு வந்து சென்றுள்ளார். அதேபோன்று யாழ் தேர்தல் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் ராமநாதனும் இதுவரை காலமேனும் இவ்வைத்தியசாலை தொடர்பாகவோ, அம்புலன்ஸ் வண்டி தொடர்பாகவோ எதுவித அக்கறையினையும் செலுத்தியிருக்கவில்லை.
ஆகவே இவ் வைத்தியசாலை தொடர்பான சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் விரைவு நோயாளர் காவு வாகனங்களை பெற்றுக்கொடுப்பதற்கும், ஏனைய சுகாதார தேவைகளை விரைவாக பூர்த்தி செய்து வழங்குவதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று வேலணை பிரதேச சபை உறுப்பினரும் சூழகம் அமைப்பின் செயலாளருமான திரு. கருணாகரன் நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.