வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை!!
வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை விமர்சித்தமைக்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
64 வயதான அலெக்ஸாண்டர் நெவ்ஸோரோவ் எனும் ஊடகவியலளாருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனின் தென் பகுதியிலுள்ள மரியுபோலிலுள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்ய படையினர் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்தியதாக நெவ்ஸோரோவ் குற்றம்சுமத்தியிருந்தார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் அவர் பொய்யான தகவல்களைப் பரப்புவதாக ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சுமத்தினர்.
நெவ்ஸோரோவுக்கு எதிராக ரஷ்ய நீதிமன்றமொன்றில் நடைபெற்ற வழக்கில் அவர் பங்குபற்றவில்லை. ஏற்கெனவே அவர் ரஷ்யாவிலிருந்து வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், நெவ்ஸோரோவை குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம், அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.