சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை!!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.ம.மு.க சார்பில் சிவபிரசாத் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தென்னரசு அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக அவர் சேலம் வந்தார்.
அப்போது ஈரோடு தொகுதி அ.தி.மு.க தேர்தல் பணி பொறுப்பாளரான செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா, பொதுச்செயலாளர் விடியல் சேகர் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளும் உடன் வந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வேட்பாளர் தென்னரசு வாழ்த்து பெற்றார். தொடர்ந்து 30 நிமிட நேரம் தேர்தல் குறித்து வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்தும், தேர்தல் களப்பணி குறித்தும் விரிவாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
செங்கோட்டையன் கூறிய கருத்துக்களை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வேலைகளை தீவிரபடுத்தும்படி அறிவுரை வழங்கினார். மேலும் அ.தி.மு.க வெற்றியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்த ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். தொடர்ந்து வேட்பாளர் தென்னரசு நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இதனால் வெற்றி பெறுவது உறுதி என்று கூறியபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.