;
Athirady Tamil News

சென்னிமலை பகுதியில் ‘நிலாச்சோறு’ திருவிழா தொடக்கம்!!

0

தமிழகத்தில் தை மாதத்தில் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பறிக்கும் திருவிழா, ஜல்லிக்கட்டு திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மற்றொரு விழா ‘நிலாச்சோறு’ திருவிழா. இத்திருவிழா ஒவ்வெரு ஆண்டும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுற்றுப்புற கிராம பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னிமலை சுற்று வட்டாரத்தில் உள்ள 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆண்டு ‘நிலாச்சோறு’ திருவிழா தொடங்கியது. விழா தொடந்து 5 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவின் 5-ம் நாள் இரவு பவுர்ணமி இரவில் விடிய விடிய விழா நடப்பது தனிச்சிறப்பு. பெண்கள் மாட்டு சாணத்தால் மெழுகி அதில் வண்ணக்கோலமிட்டு பிள்ளையார் பிடித்து வைத்து அவரவர் வீடுகளில் இருந்து கொண்டு வந்துள்ள உணவு பதார்த்தங்களை வைத்து பூஜை செய்து விட்டு நிலாச்சோறு ஊட்டுவர்.

பூஜை செய்த பலகாரங்கள் உணவுகளை சாப்பிட்டு விட்டு உக்கை என கூறி களி மண் கொண்டு ஒரு சதுர வடிவமாக செய்து அதற்கு பூ அலங்காரம் செய்து வைத்து அதை சுற்றி பெண்கள் பாட்டுப்பாடி கும்மி கொட்டுவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளால் திருவிழா களைகட்டும். தை மாதம் முழு நிலவு நாளில் ஊரிலுள்ள குழந்தைகள் பெண்கள் ஒன்று கூடி உணவு உண்டு கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். மாறிவரும் இன்றைய சூழலில் இன்னும் மக்களின் பாரம்பரிய கலை வடிவங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு மட்டுமல்ல மக்களின் கூட்டு வாழ்க்கையை அதன் உயரிய பெருமைகளைப் பாதுகாத்து நிற்கிறது.

இந்த நிகழ்வுகளில் ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள கலைத்திறனை வெளிப்படுத்துகின்றனர். ஆண்களும் முன் வந்து கும்மியடிப்பார்கள். குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டு கிராமங்களில் 5 நாளும் நிலவு வெளிச்சத்தில் நடக்கும் இந்த விழாவில் பெண் கள் பல்வேறு நிகழ்வுகளை பாடல்கள் மூலம் பதிவு செய்வர். விழா நாளை மறுநாள் (4-ந் தேதி) இரவு நிறைவு பெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.