;
Athirady Tamil News

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இருந்து மீள முடியும் – ரணில் !!

0

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த காரணியாகும் என இதன்போது சுட்டிக்காட்டினார்.

கண்டி தலதா மாளிகையில் நேற்று (01) இடம்பெற்ற சிறிலங்கா முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷண விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, ”சிறப்புமிக்க சேவைக்காக விபூஷண பதக்கங்கள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு இன்று அதனை வழங்கினோம். மேலும், 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த சேவை விருதுகள் வழங்கப்பட்டன.

இன்று பதக்கம் பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். உங்கள் சேவையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நிகழ்வு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் முதலாவது நிகழ்வாகும்.

முப்படைகளுக்காக இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நமது நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது தேசபிதா டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான தேசிய தலைவர்கள்.

இன்று நாடு தானாக சுதந்திரம் பெற்றது என்று சிலர் கூறுகின்றனர். சுதந்திரம் தானாகக் கிடைக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் நேச நாடுகளுக்கு ஆதரவாக 02 நாடுகள் இருந்தன.

அதில் ஒன்று சீனா. மற்றொன்று இலங்கை. இலங்கையில் மட்டுமே சர்வசன வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவாக்கத்துறை இருந்தது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மந்திரி சபையின் தலைவராக இருந்த டி.பி. ஜெயதிலக்கவும் பின்னர் தேசபிதா டி.எஸ். சேனநாயக்க ஆகியோருக்கு, இரண்டாம் உலகப் போருக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டி பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) , போருக்குப் பிறகு இலங்கைக்கு ஒரு நிபந்தனையின் பேரில் சுதந்திரம் வழங்கப்படும் என்றார்.

அதன்படி இந்தியாவுக்கு முதலில் சுதந்திரம் வழங்கப்பட்டது. அப்படித்தான் நமக்கு இந்த சுதந்திரம் கிடைத்தது. இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு ஆதரவளிக்க அரச மந்திரி சபை முடிவு எடுத்தது.

அதே போன்று, சிறிலங்கா அதிகாரிகள் தாமாக முன்வந்து இரண்டாம் உலகப் போரை ஆதரித்தனர். நாங்கள் சுதந்திரம் பெற்ற பிறகு, டி.எஸ். சேனநாயக்க இதனைப் பாராட்டியதுடன், அந்தப் படைகளுடன் எமது முப்படை பிரிவுகளை ஆரம்பித்தார்.

நாம் இரண்டாம் உலகப் போரை ஆதரித்து சுதந்திரம் பெற்றிருந்தால், அதன் கொண்டாட்டத்தின் போது நமது முப்படைகளின் சேவையையும் பாராட்ட வேண்டும். நமது முப்படைகள் இப்போது சிறிலங்காவில் மட்டுமன்றி ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையாகவும் செயல்படுகிறது.

எதிர்காலத்தில் இந்த அமைதி காக்கும் படைக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம். இன்று நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பாவிட்டால், இந்த கடன் பொறியில் இருந்து விடுபடாவிட்டால், எமது நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போய்விடும்.

நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியல் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை. இன்று உலகின் பொருளாதார சக்திகளிடம் நாம் சரணடைய முடியாது. எனவே இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களை வாழ வைப்பதே நமது முதல் பணியாக இருக்க வேண்டும்.

அதே போன்று அவர்களின் இழந்த வருமான வழிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். இன்று பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அதைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். சில அரச ஊழியர்கள் கடன் வாங்கி வரியும் செலுத்தும் வகையில் வருமானம் இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர்.

இந்த அழுத்தத்தை நாம் அனைவரும் தாங்க வேண்டியுள்ளது. இந்த அழுத்தத்தை நம்மால் நீக்க முடியும். அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா நியூலேண்ட் இன்று என்னைச் சந்தித்தார். நாங்கள் முன்னெடுக்கும் இந்த பொருளாதார திட்டத்திற்கு அமெரிக்க அரசு முழு ஆதரவை வழங்கும் என்ற அமெரிக்க அதிபரின் செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், இந்தக் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை எங்களால் நிறைவு செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

மேலும், இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்பாட்டை நாம் பெற்றபோது, அதை உலகமே ஏற்றுக்கொண்டது.

பயங்கரவாதப் போருக்கும் பொருளாதாரப் போருக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. அன்று உயிர்கள் பறிபோயின.இன்று வருமானம் இழந்துள்ளது. அதுதான் வித்தியாசம்.

இழந்த உயிர்களை மீண்டும் வழங்க முடியாது. ஆனால் இழந்த வருமானத்தை மீட்டெடுக்க முடியும்.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அனைவரும் அந்த வேலைத்திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம்.

அப்போது நாம் பெற்ற அரசியல் சுதந்திரம் மற்றும் நாங்கள் பாதுகாத்த பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் பொருளாதார சுதந்திரத்துடன் முன்னேற முடியும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.