புலிகளும் 13ஐ ஏற்கவில்லை – கஜேந்திரகுமார்!!
கொள்கை என்ற பெயரில் இந்தியாவுக்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளுக்கு இடையேயான போட்டி என்று தெரிவித்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரெலோ புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியன இந்தியாவின் முகவர்கள் என்றும் விமர்சித்தார்.
அனைவராலும் இன்று பேசப்படும் 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற ஓர் கட்டமைப்பு. ஒற்றையாட்சி என்பது சிங்கள பௌத்த ஆட்சி. வேறு எவருக்கும் அங்கு அதிகாரம் இல்லை. அதனாலேயே தமிழ் பெருந்தலைவர்கள் நீண்டகாலமாக இதனை நிராகரித்து வந்திருக்கின்றார்கள். விடுதலைபுலிகள் கூட அதனை ஏற்றுகொள்ளவில்லை என்றார்.
வவுனியாவுக்கு இன்று (02) விஜயம்செய்த அவர் தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..
இது ஓர் உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் இந்த சூழலை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். போர் முடிவடைந்து 14வருடங்கள் கடக்கின்றநிலையிலும் பொருளாதார ரிதீயாகவோ அரசியல் ரீதியாகவோ எந்தவிதமான முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.
போர் குற்றத்துக்கும் தீர்வு கிடைக்கவில்லை. எமது விடயங்கள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட தரப்பான நாங்கள் முன்னேற்றமடையாமலே இருக்கிறோம் என்றார்.
பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு கொடூரமான சட்டமாக சொன்னாலும் ,அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சிங்கள மக்கள் விடுவிக்கப்படுகின்றார்கள், ஆனால், அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்மக்கள் தொடர்ச்சியாக சிறைகளிலேயே வாடுகின்றனர் என்றார்.
எங்களால் தெரிவுசெய்யப்படுகின்றவர்கள் இந்த படுமோசமான ஏமாற்றுவேலைக்கு விலைபோனமையினாலேயே இந்த திருத்தம் பற்றி பலரும் இன்று பேசுகின்றார்கள். அதுவே உண்மை. இதனை நாம் எவ்வாறு மாற்றப்போகின்றோம். இந்த தேர்தல் ஊடாகமக்கள் தமது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தவேண்டும் என்றார்.