விமான நிலையத்தில் வாக்குவாதம் – தம்பதியின் செயலால் அதிர்ச்சிக்குள்ளான அதிகாரிகள்!
கைக்குழந்தைக்கு விமான ஊழியர்கள் தனி பயணசீட்டு எடுக்க வேண்டும் என்று கூறியதால் ஒரு தம்பதி செய்த காரியம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் கைக்குழந்தைக்குத் தனியாக பயணசீட்டு எடுக்க வேண்டும் என்று ரயன்ஏர் நிறுவன விமான ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததால் அந்த தம்பதி குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், அந்த தம்பதி தங்கள் குழந்தையை சோதனை வளாகத்திற்கு முன்பாக விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
கைக்குழந்தைக்கு விமானத்தில் தனி பயணசீட்டு வாங்க வேண்டும் என்று ரயன்ஏர் ஊழியர்கள் சொன்னதால் அந்த தம்பதி இப்படிச் செய்துள்ளதாக இஸ்ரேல் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த தம்பதி பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த தம்பதி தங்கள் குழந்தையையும் முதலில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
அதிகாரிகளில் கோரிக்கையால் ஆத்திரமடைந்த அந்த தம்பதி, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், விமான ஊழியர்கள் நிச்சயம் பயணசீட்டு எடுத்தாக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பணத்தைச் செலுத்தி பயணசீட்டை பெறாமல் ஜோடி குழந்தையை சோதனை வளாகத்தில் விட்டுவிட்டு விமானத்தை நோக்கி ஓடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தம்பதியினரை நிறுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு சோதனையின் போது அவர்களை நிறுத்திய அதிகாரிகள், குழந்தையைப் பெற்றுச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். கைக்குழந்தையை பொறுப்பின்றி விட்டுச் சென்ற அந்த ஜோடியை பெல்ஜியம் நாட்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ரயன்ஏர் விமான நிறுவன அதிகாரி கூறுகையில், “இதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் பார்த்ததே இல்லை. எங்களால் எங்கள் கண்களையே நம்ப முடியவில்லை.”என தெரிவித்தார்.