புதிய படை நடவடிக்கைக்கு தயாராகும் ரஷ்யா – ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு !!
உக்ரைன் மீதான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பாரிய தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் எச்சரித்துள்ளார்.
இந்தப் படை நடவடிக்கைகளுக்கென ஆயிரக்கணக்கான படையினரை குவித்துள்ளதாக ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைகின்ற நிலையில், உக்ரைனுக்கு ஆதரவை வெளியிடும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுவலா வெண்டர் லெயன் தலைநகர் கீயேவ்விற்கு விஜயம் செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுடன் எப்போதும் போல் உறுதியாக நிற்கிறது என்பதைக் காண்பிப்பதற்கு தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தொடரூந்தில் தலைநகர் கீயேவை சென்றடைந்த பின்னர் எடுக்கப்பட்ட நிழற்படத்தை பதிட்டு, அவர் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊர்சுலா வெண்டர் லெயன் மற்றும் ஐரோப்பிய பேரவையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் நாளை வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கியை சந்திக்கவுள்ளனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி புதிய தாக்குதலை ரஷ்யா ஆரம்பிக்கலாம் என உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பொது அணிதிரட்டல் அறிவிப்பை ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் வெளியிட்ட பின்னர், சாத்தியமான தாக்குதல்களுக்காக 5 இலட்சம் வீரர்களை அணி திரட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.