டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரியிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பா.ஜனதா தலைவர் அண்ணாமலை!!
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தை தணிக்கை முடியாமல் பா.ஜனதா தவிக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
இன்று காலையில் அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி எடுத்து கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை இன்று மாலை அண்ணாமலை சந்தித்தார். உடன் மத்திய மந்திரி எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.
அப்போது, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமுமில்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.