;
Athirady Tamil News

வசந்த முதலிகே குறித்து மேன்முறையீடு செய்க: பொலிஸ் கோரிக்கை!

0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவித்தமை குறித்து சட்ட நடைமுறைகளுக்கு அமைய மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் சட்டமா அதிபரிடம் வியாழக்கிழமை (02) கோரிக்கை முன்வைத்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வசந்த முதலிகேவுக்கு பொருந்தாது என்றும் சட்டத்தின் விதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை முறைப்பாட்டாளர் தரப்பு உருவாக்கியுள்ளது என்று அறிவித்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் வசந்த முதலிகேவை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தார்.

இந்நிலையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் வசந்த முதலிகே மீதான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதால் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு தொடர்பில் தற்போதுள்ள சட்ட நடைமுறைகளுக்கு அமைய மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் தலைமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

காலி முகத்திடல் போராட்டம் குறித்து, ஓகஸ்ட் மாதம் 21 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட வசந்த முதலிகே, 89 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதன்கிழமை (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட 90 நாட்கள் தடுப்புக் கட்டளைக்கு அமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார்.

31ஆம் திகதியன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும் 1ஆம் திகதியன்று ஏனைய மூன்று வழக்குகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்தே வசந்த வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.