மாமாவால் முடியாததை மருமகன் செய்யப் பார்க்கிறார் !!
இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணப்பட வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, ஜே.ஆர்.ஜயவர்தனாவே முழுமையாக அமல்ப்படுத்த முயற்சிக்காத 13ஐ அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க முழுமையாக அமல்ப்படுத்த முயல்வதாகவும் தெரிவித்தார்.
ஐ.எம்.எப் கூறிய வழியிலேயே பயணிப்பதாகக் கூறி வரிகளை கடுமையாக அரசாங்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். ஐ.எம்.எப் கூறிய வழியில் செல்வதாகக் கூறும் அரசாங்கம், ஐ.எம்.எப் கூறுவதுபோல ஏன் அரச செலவீனத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்துக்கான அரச செலவு 600 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிகளவில் செலவு செய்து சுதந்திரத்தினம் கொண்டாடப்படுகின்றமை தொடர்பில் மக்கள் மகிழ்ச்சியில் இல்லை. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார்.
அதனால், நாட்டுக்கு மேலும் அதிக செலவுகள் ஏற்படும். புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்போது அக்கிராசன உரையாற்ற வேண்டும் என்பதற்காகவே ரணில் இவ்வாறு செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம் ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாரான ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம். இச்சட்டம் கொண்டுவரும்போது ஆட்சியிலிருந்த ஜே.ஆர்க்கு மக்கள் ஆணை கிடையாது. ஜே.ஆர் கூட இதனை முழுமையாக அமல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ரணில் தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக அதனை முழுமையாக அமல்ப்படுத்தப் பார்க்கிறார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்ச மக்கள் வாக்களித்தது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்ப்படுத்துவதற்கு அல்ல, மாறாக புதிய அரசியலமைப்பு ஊடாக இனப் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்பதற்கே வாக்களித்தனர் என்றார்.
நாட்டு மக்கள் மறந்துபோயுள்ள இனவாதத்தை இதனூடாக ரணில் தூண்டப் பார்ப்பதாகவும் தெரிவித்த நாலக கொடஹேவா, அரச நிர்வாகச் செயற்பாடுகளில் தலையீடுகளை மேற்கொள்வது, தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிப்பது என ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் காணப்பட்ட மோசமான செயற்பாடுகள் ரணிலிடமும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
நரித்தனம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கூட அழுத்தங்களைப் பிரயோகித்து தனக்கு தேவையான வகையில் சட்டங்களை இயற்றப் பார்க்கிறார் எனவும் தெரிவித்தார்.