என்னை விடுதலை செய்யவல்ல கொலை செய்யவே திட்டமிட்டிருந்தது – பல தகவல்களை வெளியிட்டார் வசந்த முதலிகே!!
சட்டவிரோதமான முறையில் என்னை சிறையில் அடைத்துவைத்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடுவேன் என விடுதலை செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (02) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பேலியகொடை பொலிஸ் நிலையத்தின் விசேட பிரிவின் பிடியாணை ஒன்றின் காரணமாகவே என்னை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மறுநாள் அதிகாலை சிவில் உடையுடன் என்னை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, புடைவை ஒன்றில் சுற்றிய நிலையில் ஹெந்தரமுல்ல பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியை என்னை நோக்கி நீட்டிக்கொண்டு, விஜேவீரவுக்கு நடத்தது, விஜேகுமாரதுங்கவுக்கு இடம்பெற்றது நினைவு இருக்கிறதா என கேட்டார்.
உனக்கும் அந்த நிலையே ஏற்படும் என்றார். அதன் பின்னர் கடலாேர பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் இருட்டு அறையில் என்னை அடைத்து வைத்தார்கள்.
இவ்வாறு என்னை சட்டவிரோதமான முறையில் அடைத்துவைத்தமைக்கு எதிராக சட்டத்துக்கு முன் செல்வேன். மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடுவேன்.
அத்துடன் அரசாங்கம் என்னை விடுதலை செய்ய நினைத்திருக்கவில்லை. மாறாக கொலை செய்யவே அவர்களின் திட்டமாக இருந்தது. அடக்கு முறைக்கு மக்கள் தலை சாய்க்காமல் தொடர்ந்து செயற்பட்டதால் அதனை செய்ய முடியாமல்போனது.
மேலும் நாளை சனிக்கிழமை எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் அனைவரும் கொழும்புக்கு வரவேண்டும். வரமுடியாதவர்கள், அவர்கள் தங்கி இருக்கும் பிரதேசத்தில் இருந்து கறுப்புக் கொடி ஒன்றை ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.