தென் ஆப்பிரிக்காவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு… குளிக்காமலே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்!!
தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மின்சாரம் தடைபடுவதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி மற்றும் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.
பல குடும்பங்களில் குழந்தைகள் குளிக்காமலேயே பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நீர்த்தேக்கங்கள் வறண்டுள்ள நிலையில், பம்பிங் ஸ்டேஷன்களுக்கும் மின்சாரம் கிடைக்காததால், ஜோகன்னஸ்பர்க், பிரிட்டோரியாவின் சில பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் குழாய்கள் வறண்டு காணப்படுகின்றன. மக்களின் குடிநீர் தேவைக்காக தற்காலிக தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சோஷாங்குவே நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் சாலையில் கற்கள் மற்றும் கழிவுகளை கொட்டி கண்டன முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தாமஸ் மபாசா கூறுகையில், ‘தண்ணீர் கிடைக்காததால் எனது பிள்ளைகள் குளிக்காமல் பள்ளிக்கு செல்லவேண்டி உள்ளது. சில சமயங்களில் நடு இரவில் தண்ணீர் வந்தால், குழந்தைகளை எழுப்பி குளிக்க வைக்கலாம் என்று காத்திருப்போம்’ என்றார்.