ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் மோசடி- தலைமை தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார்!!
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. தொகுதியில் உள்ள 238 பூத்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம்.
குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளை தொகுத்து கொடுத்துள்ளோம். சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தலாம் என கால அவகாசம் இருந்தும் அவர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.