போலீஸ் பிடியில் இருந்து செயின் பறிப்பு கொள்ளையன் ஆற்றில் குதித்து தப்பி ஓட்டம்!!
ஆந்திர மாநிலம், பொட்டி ஸ்ரீ ராமுலு நெல்லூர் மாவட்டம், உப்பத்துறை பகுதியை சேர்ந்தவர் கிரி (வயது 32). பிரபல கொள்ளையனான கிரி தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தார். ஏ.எஸ். பேட்டை போலீசார் கிரி மற்றும் வேறு ஒரு நபரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஜீப்பில் அழைத்துச் சென்றனர். அப்போது கிரி போலீசாரிடம் என்னுடைய நண்பரும் இதே போல் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அவரை நான் அடையாளம் காட்டுகிறேன் அவரையும் கைது செய்யுங்கள் என கூறினார்.
இதனை உண்மை என நம்பிய போலீசார் இரவு 7 மணி அளவில் கிரியின் நண்பரை கைது செய்வதற்காக கிரியை அழைத்து கொண்டு ஆத்மகூரூ வழியாக ஜீப்பில் சென்றனர். அப்போது ஆற்று பாலத்திற்கு முன்பாக வேகத்தடை இருந்தது. இதனால் அந்த பகுதியில் ஜீப் மெதுவாக சென்றது. இதை பயன்படுத்திக்கொண்ட கிரி ஜீப்பில் இருந்து கீழே குதித்து ஓடினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கிரியை பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். பாதி பாலத்திற்கு சென்ற கிரி திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ந்து போன போலீசார் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நீச்சல் வீரர்களை அழைத்து வந்து கிரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடியும் கிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிரி ஆற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது நீச்சல் அடித்து சென்று தப்பிவிட்டாரா? என போலீசார் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். நகை பறிப்பு கொள்ளையன் போலீசாரை ஏமாற்றிவிட்டு ஆற்றில் குதித்து சினிமா பாணியில் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.