மதிய உணவு வழங்கும் தொண்டு நிறுவனம் தனியாரிடம் நிதி வசூல்-எதிர்கட்சி தலைவர் சிவா புகார்!!
சட்டமன்ற வெளி நடப்புக்கு பின் எதிர்கட்சி தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவை மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. முக்கியமான விஷயங்கள் குறித்து பேச சபையில் அனுமதி இல்லை. கல்வி நிலையங்கள் அரசிடம் இல்லாமல், அதிகாரிகள் கையில் உள்ளது. மாணவர்களுக்கு இதுவரை நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படவில்லை. சீருடை, இலவச சைக்கிள் ஆகியவையும் தரப்படவில்லை.
குறிப்பாக நல்ல தரமான உணவு இல்லை. தொண்டு நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு உணவு தரப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான நிதியை தனியார் நிறுவனங்களிடம் இருந்து தொண்டு நிறுவனம் வசூலிக்கிறது. இது ஒரு ஏமாற்று வேலை.ஆர்.எஸ்.எஸ். இதன் பின்னணியில் செயல்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு முட்டை சரியாக வழங்கப்படுவதில்லை. ஏ.எப்.டி. உள்ளிட்ட பஞ்சாலை பிரச்சனைகள் பேசமுடியவில்லை.
ஏதாவது பிரச்சனை வரும்போது மட்டும் முதல்- அமைச்சர் மாநில அந்தஸ்தை கையில் எடுத்து கொள்கிறார். ஜானகிராமன் முதல்-அமைச்சராக இருந்த போது மாநில அந்தஸ்து குறித்து பேச எதிர்கட்சி தலைவர்கள் உள்பட அனைவரையும் டெல்லி அழைத்து சென்று பேசினார். ரேஷன் கடையை மூடும்போது யாரையும் கேட்கவில்லை. ஆனால் அதை திறக்க மட்டும் அனுமதி பெற வேண்டுமா? புதுவையில் 2 விளையாட்டு மைதான ங்களை தவிர வேறு மைதானங்கள் இல்லை.தொழிற்சாலைகள் மூட ப்பட்டு வருகிறது. இவை குறித்து விவாதிக்கப்படவில்லை.
ஜி20 மாநாட்டினால் புதுவையில் 10 சாலைகள் போடப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் பல முறை கோரிக்கை வைத்தும், நிதி இல்லை என கூறினார்கள். இப்போது நிதி எங்கிருந்து வந்தது. கருணாநிதிக்கு சிலை வைக்க கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு சிவா கூறினார்.