ஆற்றை கடந்தபோது 2 பேர் இறந்ததால் சொந்த பணத்தில் மரப்பாலம் கட்டிய விவசாயி!!
தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், கட்காம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தையொட்டி ஆறு ஒன்று செல்கிறது. ஆற்றை தாண்டி அப்பகுதி பொதுமக்களின் 400 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. அவர்கள் ஆற்றைக் கடந்து தான் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றைக் கடக்க முயன்ற 2 விவசாயிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் பாலம் கட்ட சொல்லி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி நரேஷ் (வயது 25).
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றைக் கடந்து செல்ல சிரமப்படுவதை கண்டு தனது சொந்த செலவில் கயிறு மற்றும் மர கட்டைகளை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் செலவில் மரப்பாலத்தை கட்டினார். சொந்த செலவில் பாலம் கட்டிய நரேஷுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.