திருப்பதி கோவிலில் தானியங்கி எந்திரம் மூலம் லட்டு தயாரிக்க முடிவு!!
திருமலையில் பக்தா்களிடம் குறைகள் கேட்கும் (டயல் யுவர் இ.ஓ) நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் அதிநவீன எஸ்.வி.அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். உலகத்திலேயே நம்பர் ஒன் அருங்காட்சியமாக இது இருக்கும். அருங்காட்சியகத்தில் 3டி இமேஜிங் முறையில் வெங்கடாசலபதியின் தங்க நகைகள் பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரமான, சரியான எடையில் லட்டு பிரசாதங்களை தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.50 கோடியில் தானியங்கி எந்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளது. அதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுகாதாரமான, சுவையான லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்க முடியும். ஆகாச கங்கை தீர்த்தம் பகுதியில் அஞ்சனாத்ரி கோவில் கட்டும் பணி பக்தர்களின் காணிக்கையில் ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடி வரையிலான செலவில் நடந்து வருகிறது. புதிய பரகாமணி கட்டிடம் 5-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். திருமலையில் உள்ள அக்கேசியா தோட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது.
அதற்கானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அக்கேசியா தோட்டத்தில் பல வண்ண மரங்கள், செடி, கொடிகள் அமைக்கப்படும். அத்துடன் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், செடி, கொடிகள், அரிய வகை மூலிகை தாவரங்கள் அக்கேசியாவுக்கு மாற்றப்படும். அதை, பக்தர்கள் பார்த்து மகிழலாம். கடந்த மாதத்தில் 20 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர்.
7 லட்சத்து 51 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.123.07 கோடி கிடைத்தது. 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.