மன்னாரில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுப்பு!!
இலங்கையின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (04) மன்னார் மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமை சுதந்திர தின கொண்டாட்டம் இடம் பெற்ற மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள்,இளைஞர்கள்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழ் உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு கைகளை சங்கிலியால் கட்டி ,வாய் மற்றும் மூக்குகளை கறுப்பு துணிகளால் மூடிய படி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக 75 ஆண்டாகியும் எமது அடிப்படை உரிமை நசுக்கப்படுகிறது,சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்,பெளத்த தேசிய வாதமும் சிங்கள இனவாதமுமே எம்மை அடிமைப்படுத்துகின்றன என எழுதப்பட்ட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் கைகளில் பதாகைகளையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவாறு போராட்டகாரர்கள் மன்னார் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.