ரஷ்யாவின் அடுத்த இலக்காகிய நாடு – சர்ச்சைக்குரிய பகுதியால் அதிரடி திட்டம் !!
ரஷ்யா ஏராளம் படையினரையும், ஆயுதங்களையும் இழந்துவிட்டது, அதனால் இனி போரைத் தொடர இயலாது என ஒருபக்கமும், ரஷ்யா இன்னமும் தன் முக்கிய படைகளை போரில் இழக்கவில்லை என இன்னொரு பக்கமும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
ஆக, ரஷ்ய – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா வராதா என உலகம் குழப்பத்துடன் காத்திருக்கும் நேரத்தில், உக்ரைனுக்கு அடுத்து இன்னொரு நாட்டைத் தாக்கவிருப்பதாக மறைமுகமாக ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்.
சிறிது காலமாக காணாமல் போன ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrov மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அவரை சமீபத்தில் ஊடகம் ஒன்று பேட்டி எடுக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
அதில், அவரே தன் உடல் நிலை குறித்து வெளியாகிவரும் வதந்திகளுக்கு பதிலளிக்கிறார். மேற்கத்திய ஊடகங்கள் இப்படித்தான் அதிபர் புடினுக்கும் உடல் நிலை சரியில்லை என்று கூறிவருகின்றன. அவை உண்மையான செய்திகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
உக்ரைன் போர் முடியுமா என உலகம் காத்திருக்கும் நிலையில், அடுத்த இலக்கை தேர்ந்தெடுத்துவிட்டோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrov கூறியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அடுத்த இலக்கு என குறிப்பிடும் நாடு, மால்டோவா. எப்படி உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பகுதியான டான்பாஸ் என்று ஒன்று உள்ளதோ, அதேபோல மால்டோவாவிலும் சர்ச்சைக்குரிய Transnistria என்றொரு பகுதி உள்ளது.
அதற்கு ரஷ்ய ஆதரவு உள்ள நிலையில், கிரீமியாவைப்போலவே இந்த Transnistriaவும் ரஷ்யாவுடன் இணைக்கப்படுமா என்ற ஒரு கேள்வி நிலவி வருகிறது.
ஆக, அதைக் காரணமாக வைத்து ரஷ்யா பிரச்சினை ஏற்படுத்தலாம் என்பது ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrovவின் பேச்சிலிருந்து தெரியவந்துள்ளது.
மால்டோவாவைத் தாக்கப்போகிறோம் என அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும், அடுத்த உக்ரைன் மால்டோவாதான் என அவர் தெளிவாக கூறிவிட்டதால் அடுத்து என்ன நிகழுமோ என ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.