இந்திய தலைவருக்கு கிடைத்த முதலிடம்: சர்வாதிகார ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட இரு நாடுகள் !!
உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி தரவரிசை பட்டியலை ‘மோர்னிங் கன்சல்ட்’ வெளியிட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றுள்ளது.
உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான ‘மோர்னிங் கன்சல்ட்’ நிறுவனம் அமெரிக்காவின் வோஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்படுகிறது.
இந்தப் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பெற்றுள்ளார்.
இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 78 சதவீதம் மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
குறித்த கருத்து கணிப்பில் மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஒபரடோர் 68 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை மூன்றாம் இடத்தை 62 சதவீத வாக்குகளுடன் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி ஆலைன் பெர்செட் பிடித்துள்ளார்.
இந்த தரவரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஜோ பைடனுக்கு 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவருக்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும் அவுஸ்திரேலிய ஜனாதிபதி அந்தோணி அல்பேன்ஸ்,பிரேசில் ஜனாதிபதியாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து ஜனாதிபதி லியோ வரத்கர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான் செஸ், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதேவேளை சீனா, ரஷ்யாவின் சர்வாதிகார ஆட்சி நடப்பதால் அந்த தலைவர்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தவில்லை என்று ‘மோர்னிங் கன்சல்ட்’ நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.