அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!!
நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் தொடர்பாக மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி, மத்திய அரசை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு, மாநில அரசுகள், விவசாயிகள், வணிகர்கள் என மத்திய அரசு ஏன் ஒவ்வொருவருடனும் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது? இப்படி அனைத்து தரப்பினருடனும் மோதலில் ஈடுபட்டால் நாடு வளர்ச்சி அடையாது. நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள், அவர்கள் தங்கள் பணிகளை செய்ய விடுங்கள். அடுத்தவர்களின் பணியில் தலையிட வேண்டாம்’ என குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கண்டித்திருந்த கெஜ்ரிவால், அமலாக்கத்துறையின் வழக்குகள் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவும், அரசுகளை கவிழ்க்கவுமே பயன்படுவதாக குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.