கின்னஸ் உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ள நாய்!!!
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த ரேபியரோ டூ அலெண்டெஜோ (Rafeiro do Alentejo) எனும் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
நாய்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் சாதாரணமாக 7 தொடக்கம் 14 வருடங்கள் வரை இருக்கும், ஆனால் அதையும் தாண்டி ஒரு நாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
பாபி என அழைக்கப்படும் இந்த நாய் உலகில் அதிக வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.
1992 இல் பிறந்த பாபிக்கு தற்போது வயது 30 வருடங்கள் 266 நாட்கள் ஆகின்றது.
இதன்மூலம் உலகில் வாழ்ந்த அதிக வயதான நாய் என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளது.
இதற்கு முன்னர், அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய்தான் உலகின் மிக அதிக வயது வரை வாழ்ந்த நாய் என்ற சாதனையைப் படைத்திருந்தது. இதை தற்போது பாபி எனும் இந்த நாய் முறியடித்துள்ளது.
பாபியின் வீட்டு உரிமையாளர்கள் கூறுகையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் பாபியின் உடல்நலம் சிறப்பாக இருப்பதாகவும், கண்பார்வை மாத்திரம் சற்றுக் குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஒருநாளைக்கு சராசரி அளவை விட அதிகமாகவே தண்ணீர் குடிப்பதும், சலிக்காமல் இறைச்சியை உண்பதும் பாபியின் நீண்ட ஆயுளுக்கு காரணம் என வீட்டுரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வகை நாய்கள் போர்ச்சுக்கல்லில் மட்டுமே காணப்படுவதுடன், இது அடர்ந்த குளிரையும் பனியையும் தாங்கும் திறன் கொண்டது.