விளையாட்டு துறையில் இளைஞர்களை அரசு ஊக்குவிக்கிறது- ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர் மோடி உரை!!
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், ‘ஜெய்ப்பூர் மகாகேல்’ என்ற விளையாட்டு விழா, 2017ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு மகாகேல் விளையாட்டு விழா, கபடிப் போட்டியில் கவனம் செலுத்தி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12ம் தேதி போட்டி தொடங்கியது.
இதில் 450-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டபேரவைத் தொகுதிகளின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 6400- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களிடையே பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.
விளையாட்டு போட்டி விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவின் ஒரு பகுதியாக வைஷாலி நகர் சித்ரகூடம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இளைஞர்களை அரசு ஊக்குவிப்பதாக கூறினார்.
மேலும், ‘ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டுத் திறமையின் கொண்டாட்டம். இத்தகைய முயற்சிகள் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றன. இந்த நிகழ்வில் பங்கேற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற முன்முயற்சிகள் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்கு உதவுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.