2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. இலக்கு!!
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பா.ஜனதா தேர்தல் வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி தேர்தல் பணிகளை தொடங்கி மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜனதா தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:- மத்தியில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா உள்ளது. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பா.ஜனதா 303 தொகுதிகளில் வென்றது. அடுத்த ஆண்டு தேர்தலில் அதிக இடங்களை வெல்வதற்காக ஏற்கனவே பா.ஜனதா பணியை தொடங்கி விட்டது.
400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது என்பது நம்பத்தகாதது அல்ல. அது அடையக்கூடிய இலக்கு தான். 2014-ம் ஆண்டில் பா.ஜனதா ‘மிஷன் 273+’-ல் பணியாற்றி அதை அடைந்தது. அதே போல் இம்முறையும் 400 இடங்கள் என்ற இலக்கை எட்டுவோம். இந்த முயற்சிகளில் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 160 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு சாவடிகளில் கட்சியை பலப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் புகழ், அவரது மக்கள் சார்ந்த ஆட்சி, களத்தில் பா.ஜனதா தொண்டர்கள் உழைப்பு ஆகியவை எங்கள் வெற்றியை உறுதி செய்யும். 400 இடங்களை கடக்க எங்களுக்கு இன்னும் +98 இடங்கள் தேவை. அனைவரின் கடின உழைப்பும் பா.ஜனதா வெற்றி பெற உதவும் என்றார்.