மின்சார கட்டணம் கட்ட வைத்திருந்த பணத்தில் மது குடித்ததால் தகராறு- மனைவி, மகளை அடித்துக் கொன்ற லாரி டிரைவர்!!
ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், தேவரப் பள்ளியை சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவர். இவரது மனைவி ஏசு மேரியம்மாள் (வயது 35). ரவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு மேரியம்மாளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தம்பதிக்கு அகிலா (10) என்ற மகள் இருந்தார். அகிலா அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். ரவி மதுவுக்கு அடிமையானதால் அவர் சம்பாதிக்கும் பணம் முழுவதும் மது குடிப்பதற்கு செலவு செய்து வந்தார். மேலும் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு மேரியம்மாள் தனது மகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் மாமியார் வீட்டிற்கு சென்ற ரவி இனிமேல் மது குடிக்க மாட்டேன், மனைவியிடம் தகராறு செய்யாமல் நல்லபடியாக வைத்துக் கொள்வேன் என உறுதி கூறியதால் ஏசு மேரியம்மாள் மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் மின்சார கட்டணம் கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று ரவி மது குடித்தார்.
மின்சார கட்டணம் கட்டாததால் ரவியின் வீட்டிற்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இன்றி வீடு இருளில் மூழ்கியது. நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வந்த ரவிக்கும் ஏசு மேரியம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு நடந்தது. இதையடுத்து ரவி வீட்டை விட்டு வெளியே சென்றார்.தாயும், மகனும் ஒரு அறையில் படுத்து தூங்கினார். வெளியே சென்ற ரவி மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து மனைவி, மகள் இருவரின் தலையிலும் ஓங்கி பலமாக தாக்கினார். இதில் இருவரின் மண்டையும் உடைந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது.
சிறிது நேரத்தில் தாயும் மகனும் துடிதுடித்து பரிதாபமாக இருந்தனர். இதையடுத்து ரவி வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு தப்பி ஓடி விட்டார். ஏசு மேரியம்மாளின் தம்பி குரவைய்யா அவரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டார். அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த குரவையா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
ஜன்னல் வழியாக பார்த்த போது தாய், மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நுஜி வீடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தேவசர்மா டி.எஸ்.பி அசோக்குமார் கவுண்ட், இன்ஸ்பெக்டர் அங்கபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுஜிவீடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமாறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.