இரா.சம்பந்தன் : தோல்வியின் அடையாளம்!!
புலிகளின் வீழ்ச்சி இராஜவரோதயம் சம்பந்தனை தமிழ் மக்களின் தலைவராக்கியது. அவர் தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாதவொரு நபரானார். ஈழப்போராட்ட காலத்திலும், அதற்கு முன்னரும், தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தனென்னும் பெயர் தீர்க்கமான பங்கு எதனையும் வகித்திருக்கவில்லை. திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர் என்பதை தவிர. இந்த பின்னணில் நோக்கினால், சம்பந்தன் ஒர் அரசியல் ஆளுமையாக செயலாற்றுவதற்கான காலமென்பது, 2009இற்கு பின்னர்தான் வாய்த்தது. இந்த அடிப்படையில், அவரது தலைமைத்துவத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருந்தது. அதாவது, தமிழ் தேசிய அரசியலானது, அதுவரையில் யாழ்ப்பாண தலைமைத்துவங்களினாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. வரலாற்றில் முதல் முதலாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தமிழ் தேசிய அரசியலுக்கு தலைமையேற்றார்.
இந்த அடிப்படையில் சம்பந்தனது தலைமைத்துவம் கவனிப்புக்குரியதாக இருந்தது. அவரது தலைமைத்துவத்திற்கு இன்னொரு வரலாற்று சிறப்புமிருந்தது. அதாவது, ஈழப் போரின் வீழ்ச்சிக்கு பின்னரான அரசியலை வழிநடத்தும் வரலாற்று பொறுப்பு அவருக்கு வாய்த்தது. முன்னாள் ஆயுத இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஓரே குடையின் கீழ் வழிநடத்துவதற்கான வாய்ப்பை பெற்ற முதல் அரசியல்வாதியும் சம்பந்தன்தான்.
இந்த பின்புலத்தில், அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள எவருமே பின்நிற்கவில்லை. வரலாற்றில் முதல் முதலாக, வடக்கு தலைமைகள் அனைவருமே, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்தன. இணைந்து பயணித்தன. முன்னாள் ஆயுத இயங்கங்களும் மிதவாத அரசியல் கட்சிகளும் ஒரணியாக பயணிப்பதற்கான அரசியல் சூழல் உருவாகியது. இந்த வாய்ப்பை, புதிய அரசியல் சூழலை சம்பந்தனால் ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடிந்ததா?
சம்பந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னணி செயற்பாடாளராக ஒருபோதுமே இருந்ததில்லை. அவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழியாக அரசியலுக்குள் பிரவேசித்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி, 1976இல், தனிநாட்டுக்கான வட்டுக் கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த கோசத்துடன் 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டதன் மூலம்தான், சம்பந்தன் முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றார். இதிலுள்ள சுவார்சியமான விடயம்.
அதன் பின்னர் மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் 2001இல்தான், சம்பந்தன் தேர்தலில் பெற்றிபெற முடிந்தது. இடைப்பட்ட காலத்தில் சம்பந்தன் எந்தவொரு தேர்தல்களிலும் வெற்றிபெறவில்லை. 1994இல், திருகோணமலையில், தங்கத்துரையே வெற்றிபெற்றிருந்தார். தோல்வியடைந்த சம்பந்தன், பதவியை விட்டுத்தருமாறு தங்கத்துரையிடம் கேட்ட கதையை, திருகோணமலையின் பழைய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அறிவார்கள். தங்கத்துரை 1997இல், சிறிசன்முகா இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற தாக்குதலின் போது, கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது இடத்திற்கு சம்பந்தன் நியமிக்கப்பட்டார்.
ஈழ ஆயுத விடுதலைப் போராட்ட காலத்தில் சம்பந்தன் அதன் மீதான தீவிர ஆதரவாளராக ஒரு போதுமே இருந்ததில்லை. முக்கியமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை சம்பந்தன் ஒருபோதுமே ஏற்றுக்கொண்டவரல்ல. இவ்வாறானதொரு பின்னணியில்தான், சம்பந்தன் விடுதலைப் புலிகளால் இலக்குவைக்கப்பட்ட நபரானார். சந்திரிக்கா குமாரதுங்கவுடன் நெருக்கமாக இருந்த காலத்தில், சம்பந்தன் விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்ததாகவே பரவலாக பேசப்பட்டது.
2012இல், சம்பந்தன் ஆற்றிய பாராளுமன்ற உரையொன்றின் போது, அவரே இதனை குறிப்பிட்டிருக்கின்றார். 2001இல், இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களோடு வெற்றிபெற்றது. ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலமானது, விடுதலைப் புலிகள் அமைப்பை பொறுத்தவரையில், முக்கியமானதொரு திருப்புமுனைக்குரிய காலமாக இருந்தது.
2001 செப்டம்பரில், அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குலைத் தொடர்ந்து, உலக அரசியல் நிலைமைகள் சடுதியாக மாற்றமடைந்தன. பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய யுத்தத்தை அமெரிக்கா பிரகடணம் செய்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. இதே 2001இல்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உருவானது.
சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் சம்பந்தனுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இருந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு, பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பங்குகொள்வது, அவர்களது கூட்டத்தில் பேசுவது என்பதை தவிர பிரத்தியேக முக்கியத்துவங்கள் இருக்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளையமைப்பாகவே செயற்பட்டிருந்தது.
2004இல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக விடுதலைப் புலிகள் அமைப்பு மாவட்டங்கள் தோறும் பணியாற்றியிருந்தது. இதன் காரணமாகவே, 2004இல், திருகோணமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறமுடிந்தது. 2005இல், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் நோக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பு தேர்தல் பகிஸ்கரிப்பை அறிவித்திருந்தது. இந்த முடிவை அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரித்திருந்தது.
உண்மையில் இதனை சம்பந்தன் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தன் எதிர்க்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளை விரோதித்துக்கொள்ள சம்பந்தன் விரும்பவில்லை. சம்பந்தனும் கூட்டமைப்பும் அன்றைய சூழலில் முற்றிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர் என்பதற்கு, இதனைவிடவும் வேறு சான்றுகள் தேவையில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியை தொடர்ந்து அரசியல் நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்தது. தேர்தல் பகிஸ்கரிப்பில் தொடங்கிய புலிகளின் புதிய அரசியல் நகர்வுகள், இறுதியில் அவர்களுக்கான புதைகுழியானது. இந்தப் பின்புலத்தின்தான் சம்பந்தனது புதிய அரசியல் அவதாரம் ஆரம்பிக்கின்றது. அதுவரையில் எந்தவொரு முக்கியத்துவமற்றிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் எவராலும் தவிர்க்க முடியாதவராக மாறுகின்றார். உள்நாட்டிலும், ராஜதந்திர தரப்பினர் மத்தியிலும் கவனிப்புக்குரிய தமிழ் தலைவரென்னும் அந்தஸ்த்தை பெறுகின்றார்.
சம்பந்தனது ஆளுமைக்குரிய காலமாக 2010 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியை மட்டுமே குறிப்பிட முடியும். சம்பந்தனது ஆரம்பகால நகர்வுகளை உற்று நோக்கினால் ஒரு விடயத்தை தெளிவாகப் பார்க்கலாம் விடுதலைப் புலிகள் அமைப்பு (பிரபாகரன்-பாலசிங்கம்) எந்த இடத்தை சரியாக விளங்கிக் கொள்ளா முடியாமல் சறுக்கியதோ, அந்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதையே சம்பந்தன் ஒரு பிரதான வழிமுறையாக பற்றிக்கொள்ள முற்பட்டார்.
அதாவது, இந்திய, அமெரிக்க ஆதரவை வெற்றிகொள்ள வேண்டும். 2010, ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்ததிலிருந்து, 2015இல் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டதுவரையில், அனைத்துமே இந்திய மற்றும் மேற்குலக விருப்பங்களை ஆதரிப்பதாகவே இருந்தது. இந்திய மற்றும் அமெரிக்க விருப்பங்களுடன் முக்கியமாக புதுடில்லியின் ஆதரவை வெற்றிகொள்ளும் உபாயங்களை இந்தக் கட்டுரை வரவேற்கின்றது. அதுதான் சரியானதும் புத்திசாலித்தனமான அரசியலுமாகும்.
ஆனால் 2010இற்கு பின்னர் கிடைத்த வாய்ப்புக்கள் எவற்றையுமே சம்பந்தன் முறையாகவும் நேர்மையாகவும் கையளவில்லை. இந்த இடத்தில்தான் சம்பந்தனது தோல்வியின் கதை ஆரம்பிக்கின்றது.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். சம்பந்தனுக்கு முன்னர் இருந்தவர்கள் வெற்றிபெற்றவர்களா? பதில் சுலபமானது. அனைவருமே தோல்விடைந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் தோல்வியடைந்த காலமும், அன்றைய அரசியல் சூழலும் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் சம்பந்தனது காலத்தில் உள்ளுக்கும், வெளியிலும் எந்தவொரு சவாலும் இருந்திருக்கவில்லை. அதே வேளை, போருக்கு பின்னரான அரசியல் சூழலை கையாளும் முழுமையான ஆளுமையுள்ள ஒருவராகவே சம்பந்தன் இருந்தார்.
அனைத்துமே சம்பந்தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. சம்பந்தன் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடியளவிற்கு கூட்டமைப்புக்குள் எவரும் இருந்திருக்கவில்லை. அவர்கள் அனைவருமே சம்பந்தனை பின்தொடர்வதற்கு தயாராகவே இருந்தனர்.
ஆனால் அனைத்தையும் சம்பந்தன் அவரது தலைமைத்துவ மோகத்தாலும், கட்சி மோகத்தாலும், அரசியல் நேர்மையின்மையாலும் போட்டுடைத்தார். 2010இல், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். அவரைப் போன்ற சிக்கலான ஒருவரை கையாளுவதிலுள்ள சிக்கல்களை இந்தக் கட்டுரை புரிந்துகொள்ளுகின்றது.
ஆனால் இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு, ஏனையவர்களை தொடர்ந்தும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவத்தை சம்பந்தன் வழங்கியிருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்து, அதனை ஒரு பலமான தேசிய இயக்கமாக மாற்றவேண்டுமென்று ஏனைய கட்சிகளும், தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்டிருந்த புத்திஜீவிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.
ஆனால் சம்பந்தனோ, அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதன் காரணமாக கூட்டமைப்பு பலவீனமடைந்து கொண்டே சென்றது. கூட்டமைப்பு பலவீனமடைவது தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்;துமென்னும், சிறிதளவு கரிசனை கூட சம்பந்தனிடம் இருக்கவில்லை.
சம்பந்தனது தவறுகளால் இறுதியில் கூட்டமைப்பு சிதைவடைந்தது. கூட்டமைப்பின் தலைவராக இருந்து கொண்டே, கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சிகளுக்கு சம்பந்தன் துணைபோனார். ஒரு அரசியல் அமைப்பின் தலைவரே, அதனை சிதைக்க முயற்பட்ட அதிசயம் தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே நிகழ்ந்தது. சம்பந்தனின் தவறுகள் இன்று அவர் உயிரோடு இருக்கின்ற போதே, கூட்டமைப்பை சிதைத்துவிட்டது. கூட்டமைப்பிலிருந்து தமிழசு கட்சி வெளியேற முற்பட்ட போது, கூட்டமைப்பின் தலைவராக அதனை தடுக்க சம்பந்தன் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
இன்று மீளவும் தமிழ் அரசியல் உரையாடல்கள் 13வது திருத்தச்சட்டத்திற்கே திரும்பியிருக்கின்றது. இதனை முன்கூட்டியே கணித்து, அப்போதே பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்பங்களில் இதனை வலியுறுத்தியிருக்கின்றார். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தை உச்சளவில் பயன்படுத்தியிருக்க முடியும். தமிழர்களுக்கு வாய்ப்பான சூழல் அப்போதிருந்தது. ஆனால் சம்பந்தன் தான்தோன்றித்தனமாக அனைத்தையும் நாசமாக்கினார். வரமுடியாத அரசியல் யாப்பிற்காக ஜந்து வருடங்களை வீணாக்கினார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, புதுடில்லியை எட்டியும் பார்க்கவில்லை. அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, இந்திராகாந்தியுடன் நட்புறவை ஏற்படுத்தியிருந்தார். தமிழினத்திற்காக அந்தப் பதவியை உச்சபட்டசமாக பயன்படுத்தியிருந்தார்.
ஆனால் மரியாதையுடன் புதுடில்லிக்கு விஜயம் செய்ய வேண்டிய சம்பந்தனோ, பத்தோடு பதினொன்றாக, அரசாங்க அமைச்சர்களோடு இணைந்து புதுடில்லி சென்றிருந்தார். சம்பந்தனது எதிர்கட்சி தலைவர் தகுதியை பயன்படுத்தி, புதுடில்லியின் ஆலோசனையுடன் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தை சிறப்பாக கையாண்டிருக்கலாம். ரணில்-மைத்திரி அரசாங்கமும் அதனை நிராகரித்திருக்காது.
ஏற்கனவே 13 பிளஸ் தொடர்பில் வாக்குறுதியளித்திருந்த மகிந்த ராஜபக்சவும் ஒரு கட்டத்திற்கு மேல் அதனை எதிர்த்திருக்க வாய்ப்பில்லை. இறுதியில் தமிழ் இனத்திற்கு எந்தவொரு பயனுமில்லாமல் அனைத்தும் முடிவுற்றது. கோட்டபாய ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து மீளவும் அனைத்தும் பழைய நிலைமைக்கே திரும்பியது.
சம்பந்தனை புத்திக் கூர்மையுள்ளவரென்று சிலர் சொல்வதுண்டு. அது உண்மைதானா? பிராந்திய சக்தியான இந்தியாவின் பிரதமர், உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர், கடந்த 21 வருடங்களாக இந்தியாவில் தொடர்ந்தும் வெற்றியை மட்டுமே கண்டுகொண்டிருந்தவரான, சிறி நரேந்திரமோடி – கூட்டமைப்பை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தார். புதுடில்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தனோ, சில்லறைத்தனமான காரணங்களை கூறி அந்த சந்திப்பை பிற்போட்டார். மாவையின் மகனுக்கு திருமணம்- அதற்கு போக வேண்டியிருக்கின்றது. இதுதான், ஒரு பிராந்திய சக்தியின் தலைவரை சந்திப்பதை பிற்போடுவதற்கு சம்பந்தன் கூறியிருந்த காரணம்.
ஒரு பத்தாமாண்டு மட்டுமே படித்தவர் கூட, இவ்வாறானதொரு காரணத்தை கூறியிருக்கமாட்டார். இதுதான் சம்பந்தனது புத்திக் கூர்மையோ? அப்போதே கூட்டமைப்பின் பங்காளிகள் சம்பந்தனை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றியிருக்க வேண்டும். ஏனெனில் அப்போதே கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் தகுதியை சம்பந்தன் இழந்துவிட்டார்.
2010-2020 காலப்பகுதி வரையில் சம்பந்தனது அனைத்து நகர்வுகளுமே தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது. இன்று கூட்டமைப்பிலும் சம்பந்தன் இல்லை. தமிழரசு கட்சியிலும் சம்பந்தனை பொருட்படுத்த எவருமில்லை. தவறுகள் பின்னர் தவறுகள் மீண்டும் தவறுகள், இதுதான் கடந்த பத்துவருடங்களாக சம்பந்தன் செய்தவை.
தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் இராஜவரோதயம் சம்பந்தனது இடம், தோல்விக்கும், ஏளனத்திற்கும், அரசியல் முட்டாள்தனத்திற்குமான சான்றாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில், இனிமேல், இடம்பெறப் போகும் எதற்கும் சம்பந்தன் காரணமாக இருக்கப் போவதில்லை. சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி, நாங்கள் எங்கோ சென்றுவிட்டோமென்று கூறியிருந்தார்.
ஆனால் அதனை தாண்டி எங்கும் செல்லவில்லை, செல்லவும் முடியாதென்பதே, மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் அதனை தாண்டி எங்கோ சென்றுவிட்டோமென்னும் வாதத்தின் பெறுமதியென்ன? இதனை சரியாக புரிந்துகொண்;டு செயற்பட்டிருந்தால், சம்பந்தன் தோல்வியடைந்திருக்க வேண்டியதில்லை. இப்போது, சம்பந்தன் ஒரு தோல்வியின் அடையாளம் மட்டுமே!