தங்க இதயம், தங்க நாக்குடன் 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி!!
2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த சிறுவனின் உடல் 1916ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் டஜன் கணக்கான மம்மிகளுடன் வைக்கப்பட்டிருந்தது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உடல் வல்லுநர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், கெய்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஹர் சலீம் தலைமையிலான குழு சிடி ஸ்கேனரை பயன்படுத்தி மம்மியை ஆய்வு செய்தபோது இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இந்த உடலில் 21 வகையான 49 தாயத்துகள் இருந்த நிலையில், அதில் பெரும்பாலானவை தங்கத்தால் ஆனவை. இதன் காரணமாகவே இந்த மம்மிக்கு `தங்க பையன்` என்று பெயரிட்டதாக ஃப்ரென்டியர்ஸ் இன் மெடிசின்(Frontiers in Medicine) என்ற சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் சலீம் கூறியுள்ளார்.