புற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் எறும்புகள் – மருத்துவ ஆய்வில் தெரிய வந்த அபூர்வ தகவல்!!
அதீத உணர்வுத் திறன் காரணமாக எறும்புகளை எதிர்காலத்தில் மனிதர்களின் புற்றுநோயை கண்டறிவததற்குப் பயன்படுத்த முடியும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
இப்போதைக்கு, எறும்புகளால் எலிகளின் நோயைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
“எலிகளின் சிறுநீரில் உள்ள புற்றுநோயைக் கண்டுபிடிக்க எலிகளை 10 நிமிடங்களில் தயார் செய்யமுடியும்” என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான பாப்டிஸ்ட் பிக்வெரெட், பிபிசியிடம் கூறினார்.
பிக்வெரெட் தனது இந்த ஆராய்ச்சியை 2017ஆம் ஆண்டு தொடங்கினார். மேலும், ஆய்வகத்தில் உருவாக்கபட்ட ஆரோக்கியமான உயிரணுக்கள் மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்ட உயிரணுக்களை வேறுபடுத்தி கண்டுபிடிக்கும் வகையில் எறும்புகளுக்குப் பயிற்சி அளிக்க அவரால் முடிந்தது.
ஆனால், இம்முறை அவரது குழு இந்த ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இம்முறை, எலிகளிடம் உள்ள மனித புற்றுநோய் கட்டிகளை எறும்புகள் கண்டறிந்துள்ளன.
வீரியம் மிக்க வாசனையைக் கண்டறிய எறும்புகளுக்குப் பயிற்சி அளித்தல்
மனிதர்களின் மார்பக புற்றுநோயை எலிகளிடம் புகுத்தி அதை வளரச் செய்யும் செனோகிராஃப்டிங் ( xenografting) என்ற உத்தியை பிக்வெரெட் மற்றும் அவரது குழுவினர் பயன்படுத்தினர்.
பின்னர், ஆரோக்கியமான எலி மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்ட எலி ஆகியவற்றின் சீறுநீர் மாதிரியைச் சேகரித்தனர்.
“பயிற்சியின்போது, எலிகளை ஒரு வட்ட அரங்கத்தில் விட்டோம். புற்றுநோய் பாதிக்கப்பட்ட எலியிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீரின் அருகே உணவையும் வெகுமதியாக வைத்தோம் ”
எறும்புகள் வெகுமதியைக் கண்டறிவதால், அவை புற்றுநோய் உயிரணுக்களின் வாசனையை அதனுடன் தொடர்புபடுத்தி, அதை அடையாளம் காண கற்றுக் கொள்கின்றன.
“உயிரணுக்கள் தொழிற்சாலைகளைப் போன்றவை. அவை வாழ ஊட்டச்சத்துக்கள் தேவை. மேலும் அவை கழிவை உற்பத்தி செய்கின்றன. புற்றுநோய் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் உற்பத்தி செய்யும் கழிவுகளை வாசனை மூலம் கண்டறியலாம்,” என்று பிக்வெரெட் கூறுகிறார்.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளான உயிரணுக்களிடம் குறிப்பிட்ட ஆவியாகும் கரிம சேர்மங்கள் உள்ளன. அவற்றை சிறுநீர் மூலமோ மூச்சுவிடுதல் மூலமோ கண்டறியலாம் என்பதை இந்த ஆய்வு விளக்கியுள்ளது.
இந்தச் சோதனையின்போது, உணவை அகற்றியபோதும்கூட புற்றுநோய் சிறுநீர் மாதிரிகளைச் சுற்றி எறும்புகள் நீண்ட நேரம் இருந்தன.
மனிதர்களிடம் உள்ள புற்றுநோயை கண்டறிய எறும்புகளைப் பயன்படுத்த முடியுமா?
“தற்போது இல்லை” என்று பிக்வெரெட் கூறுகிறார்.
“இது தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள நாம் மனித சிறுநீரை பரிசோதனை செய்யத் தொடங்க வேண்டும்,” என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார். ஆனால், எலி சிறுநீரை சோதனை செய்வதைவிட இது சிக்கலானது என்றும் அவர் தெரிவித்தார்.
மனிதர்களின் புற்றுநோய் வாசனையைக் கண்டறிய எறும்புகளுக்கு பயிற்சியளிப்பதில் வயது, பாலினம், உணவு போன்ற பல்வேறு விஷயங்கள் அடங்கும். மேலும், ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வாசனை உள்ளது.
“மனிதர்களுக்கு ஒரே மாதிரியான வாசனைகள் இருப்பதில்லை. நபருக்கு நபர் அது மாறுபடும். எறும்புகள் புற்றுநோய் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் மட்டுமே கவனம் செலுத்துமா என்பதும் நமக்கு தெரியாது,” என்று பிக்வெரெட் விளக்கினார்.
ஆனால் எறும்புகள் மிகவும் பயனுள்ள மற்றும் குறைந்த செலவில் கண்டறியும் கருவிகளாக இருக்கும் என அவர் நம்புவதால், அவர் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு அர்ப்பணிப்பாக உள்ளார்.
“எறும்புகள் குழுக்களாக வாழ்கின்றன. அதோடு, ஒன்றுக்கொன்று தகவல்களைப் பகிர்ந்துகொள்வது ஒரு நன்மையாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
10 சதவீத எறும்பு குழுக்கள் புற்றுநோயைக் கண்டறிய கற்றுக் கொண்டால் அவை மற்றவற்றுக்கும் இந்த அறிவைப் பகிரும் என்று அவர் கருதுகிறார்.
“ஒருவேளை தகவல் பரவக்கூடும். மேலும் முழு குழுவுக்கும் பயிற்சி அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை,” என்று அவர் கூறுகிறார்.
“தேனீக்கள் மூலமாக இந்தக் கோட்பாடு ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட நிலையில், எறும்புகள் மூலம் நிரூபிக்க கூடுதல் தகவல்கள் தேவை,” என்று பிக்வெரெட் தெரிவித்தார்.
புற்றுநோயை கண்டறிய வேறு எந்த விலங்குகள் உதவுகின்றன?
பத்து ஆண்டுகளாக, மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டெபாஜித் சாஹா வெட்டுக்கிளிகளின் புற்றுநோய் உயிரணுக்களை கண்டறிய உதவும் திறனை ஆராய்ந்து வருகிறார்.
ஆரோக்கியமான மற்றும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான உயிரணுக்கள் இடையே உள்ள வித்தியாசத்தை வெட்டுக்கிளிகளால் நுகர முடியும் என்பதை அவரது குழு கண்டுபிடித்துள்ளது.
ஆனால் அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பயிற்றுவிக்க முயற்சி செய்யவில்லை, மாறாக அவற்றின் மூளையைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்.
“மூளைக்குள் நாம் நேரடியாகச் செல்ல முடியும். தற்போதுள்ள நரம்பியல் அறிவைப் பயன்படுத்தி நரம்பியல் சமிக்ஞைகளில் இருந்து ஒரு மாதிரியை உருவாக்கவும் முடியும்,” என்று டாக்டர் சாஹா பிபிசியிடம் கூறினார்.
வெட்டுக்கிளிகளின் மூளையைப் படிப்பதன் மூலம் அவர்கள் சேகரிக்கும் அறிவு, நோயாளியின் சுவாசத்தைப் பயன்படுத்தி புற்றுநோயைக் கண்டறிய பூச்சி உணர்ச்சி நியூரான்களை பயன்படுத்தும் சாதனத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை அவர்களுக்கு வழங்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
“உயிரினங்களை நோய் கண்டறிதலுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி சிந்திக்கும் முழு யோசனையையும் நான் விரும்புகிறேன்,” என்று சாஹா கூறினார்.
ஆனால், அதற்கு பூச்சிகளின் உதவி மட்டும் போதாது.
பிரிட்டனில் Medical detection dogs என்ற தன்னார்வ நிறுவனம், புரோஸ்டேட் புற்றுநோயை முகர்ந்து பார்க்கும் மின்னணு மூக்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
“நாய்களால் சிறுநீர்ப்பை புற்றுநோயைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதை ஆராய்வதில் எங்கள் பணி தொடங்கியது.
புற்றுநோயாளிகளின் சிறுநீரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து நாய்கள் அதைக் கண்டுபிடிப்பதன் செயல்திறன் குறித்து இது ஆராய்கிறது,” என்று ஆராய்ச்சி மற்றும் வணிக மேம்பாட்டுத் தலைவர் சோஃபி அஜீஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
தொண்டு நிறுவனம் 2004ஆம் ஆண்டில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆறு நாய்களுக்குப் பயிற்சியளித்தது. மேலும், எதிர்பார்க்கப்பட்ட வாய்ப்பைவிட மூன்று மடங்கு அதன் கண்டறியும் விகிதம் இருப்பது தெரிய வந்தது. சிறுநீர்ப்பை புற்றுநோயை 90 சதவீத துல்லியத்துடன் நாய்களால் மோப்பம் பிடிக்க முடியும் என்பதை பிற்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
நோயாளிகளின் ரத்த மாதிரிகளில் இருந்து கருப்பை புற்றுநோயை நாய்கள் மோப்பம் பிடிக்கும் என்று மற்றோர் ஆய்வு காட்டுகிறது. பயிற்சி பெற்ற நாய்கள் 99 சதவீத பரிசோதனைகளில் அதைக் கண்டறிய முடிந்தது.
அடுத்து எலக்ட்ரானிக் மூக்கை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி வந்தது. ஆனால் துர்நாற்றத்தின் நுணுக்கங்கள் காரணமாக அது சவாலானது.
“குறிப்பாக நோய்கள் தொடர்பாக பார்க்கும்போது, ஒரு நபரின் சொந்த நுண்ணுயிர், ஒரு நோய்க்கான அவர்களின் சொந்த நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பொறுத்து வாசனை வித்தியாசப்படுகிறது,” என்று அஜீஸ் கூறுகிறார்.
எனினும், பூச்சிகள் தொடர்பான புதிய ஆராய்ச்சிகள் புற்றுநோய் கண்டறிதல் தொடர்பான பிற ஆராய்ச்சிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
“விலங்குகளைப் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அறிந்துகொள்கிறோமோ அவ்வளவும் நல்லது. எங்களைப் போன்ற விஞ்ஞானிகளிடம் இருந்தோ அல்லது எறும்புகள் புற்றுநோயைக் கண்டறியுமா என்று ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகளிடம் இருந்தோ வரும் ஆராய்ச்சிகள் மிகவும் நல்லது. இவையனைத்தும் மிகப் பெரிய புரிதலைக் கொடுக்கும்” என்று அஜீஸ் கூறுகிறார்.