இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சித்தாரா பர்வேஸ் முஷாரஃப்?
2001ல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான விரிசலான உறவை சரி செய்வதற்கான நேரம் வந்துவிட்டதாக பர்வேஸ் முஷாரஃப் நம்பினார்.
அணு ஆயுதம் உடைய இந்த இரண்டு நாடுகளுமே இருமுறை போர் புரிந்துள்ளன. காஷ்மீர் தொடர்பாக பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரை இருநாடுகளுக்கும் இடையே பிரிக்கும் நடைமுறை எல்லைக் கோட்டு பகுதியில் அமைதி என்பது மழுப்பலாகவே இருந்தது.
எனினும், இந்தியாவுடன் சமாதானம் தொடர்பாக முஷாரஃப் பேசுவதற்கு அது சரியான தருணமாக இல்லை.
1999ல் கார்கிலில் நிகழ்ந்த மோதலுக்கும் அதே ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதிலும் அவரின் பங்கு பிரதானமாக இருந்தது என இந்தியா நம்பியது. பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை 1999 அக்டோபரில் முஷாரப் பதவியில் இருந்து அகற்றியதும் இந்தியர்களை எச்சரிக்கையாக இருக்க வைத்தது.
2001ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர், இச்சூழலை மாற்றும் வாய்ப்பை கண்டுபிடித்ததாக தனது சுயசரிதையில் முஷாரஃப் நினைவுகூர்ந்துள்ளார். டெல்லியில் பிறந்தவரான முஷாரஃப், குஜராத் நிலநடுக்கம் தொடர்பாக அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயயை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்ததோடு மருந்து உட்பட சில நிவாரண பொருட்களையும் இந்தியாவுக்கு வழங்கினார். “இது கடினமான சூழலை மாற்றியது . மேலும் இந்தியா செல்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியது ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் மஹ்மத் கஷுரி, தனது சுயசரிதையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக வேறு விதமாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, இந்தியாவின் அப்போதைய துணை பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி, முஷாரஃபை இந்தியாவுக்கு அழைக்கும் யோசனையை வாஜ்பாயி இடம் கூறியுள்ளார். மேலும், இந்திய பிரதமரின் சிறந்த அரசியல் நடவடிக்கையாக இது வரவேற்கப்படும் என்றும் அவர் நம்பினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம், முஷாரஃப் மற்றும் வாஜ்பாயி இடையே புதுடெல்லியில் நடைபெற்ற ஆக்ரா மாநாடு பரபரப்பாக பேசப்பட்டது. இரு தலைவர்கள் மற்றும் அவர்களது வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே நீடித்த சந்திப்புகளில் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் முஷாரஃப் கோபமடைந்து ஆக்ராவை விட்டு வெளியேறினார்.
இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக தான் வாஜ்பாயியை சந்திக்க சென்றதையும் தனது சுயசரிதையில் முஷாரஃப் கூறியுள்ளார்.
“நம் இருவருக்கும் மேலே யாரோ ஒருவர் நம்மை ஆளும் வல்லமை படைத்தவராக இருக்கிறார் என நான் பெரிதாக தெளிவில்லாமல் சொன்னேன். இன்று நாம் இருவருமே அவமானப்படுத்தப்பட்டோம் என்றும் கூறினேன். அவர் பேசாமல் அமைதியாக இருந்தார். அவருக்கு நன்றி கூறிவிட்டு உடனடியாக நான் வெளியேறினேன் ” என அவர் நினைவுகூர்கிறார்.
சூழலை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும் வரலாற்றில் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் வாஜ்பாயி தவறவிட்டுவிட்டார் என்று முஷாரஃப் நம்பினார்.
அதேநேரத்தில், இந்த நிகழ்வு தொடர்பாக இந்தியாவின் பார்வை வேறுவிதமாக உள்ளது. தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற முஷாரஃப்பின் அணுகுமுறையே உச்சிமாநாட்டின் தோல்விக்கு காரணம் என்று இந்தியா குற்றஞ்சாட்டுகிறது.
வாஜ்பாயியுடனான தனது முக்கியமான சந்திப்பின் காலை பொழுதில், இந்திய பத்திரிகையாளர்களுடன் முறைசாரா காலை உணவு சந்திப்பை நடத்தி, சூழலை மேலும் குழப்ப நிலைக்கு முஷாரஃப் இட்டு சென்றார் என்று வாஜ்பாயி அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் நினைவுகூர்கிறார். இந்த சந்திப்பில் சில செய்தியாளர்கள் ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ (ஒளிபரப்பக் கூடாத)உரையாடல்களையும் பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் இந்திய ஊடகங்களில் ஒளிபரப்பாகின. “தனிப்பட்ட சந்திப்பு என்பது பொது நிகழ்ச்சியாக மாறியது ” என்று இந்த நிகழ்வில் பங்கேற்ற செய்தி ஆசிரியர் ஒருவர் கூறினார்.
முஷாரஃப்பின் இந்த போக்கு, மாநாட்டில் கட்டுப்பாடற்ற கருத்தை கூற அவரை தூண்டியது என்று தனது சுயசரிதையில் ஜஸ்வந்த் சிங் எழுதியுள்ளார். கார்கில் யுத்தம், சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதும் வாஜ்பாயி ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி தருகிறார் என்பதும் முஷாரஃப்பிற்கு புரியவில்லை போலும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநாட்டில், காஷ்மீர் பிரச்னையை தான் எப்படி தீர்க்க விரும்புகிறேன் என்பது குறித்து முஷாரஃப் கூறினார். மேலும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எவ்வித பயங்கரவாதமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எப்படியும் ஒரு உடன்பாட்டை எட்டும் அவசரத்தில் அவர் இருந்ததாக தெரிகிறது என்றும் ஜஸ்வந்த் சிங் குறிப்பிடுகிறார்.
வரைவு ஒப்பந்தம் வாஜ்பாயி மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த சிலருக்கு மட்டும் காட்டப்பட்டதாக தெரிவிக்கும் ஜஸ்வந்த் சிங், “பயங்கரவாதம் தொடர்பாக தெளிவான மற்றும் போதிய விளக்கம் அதில் இல்லை. நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் இருந்தது. பாகிஸ்தானுக்கு மட்டும் கவலையளிக்கக் கூடிய அல்லது முன்னுரிமை அளிக்கக் கூடிய விஷயங்கள் நமக்கு எப்படி முக்கிய நகர்வாக இருக்கும்” என்பதே அவர்களின் கூட்டுக் கருத்தாக இருந்ததாகவும் ஜஸ்வந்த் சிங் எழுதியுள்ளார்.
தான் புறப்படுவதற்கு முன்பாக வாஜ்பாயியை சந்தித்ததாக முஷாரஃப் கூறும் சந்திப்பு தொடர்பாக இந்தியாவின் கூற்று வேறுவிதமாக உள்ளது. “முஷாரஃப் பேசிக்கொண்டே இருந்தார், நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்” என்று பின்பு ஒருமுறை தன்னிடம் வாஜ்பாயி தெரிவித்ததாக ஜஸ்வந்த் சிங் நினைவு கூர்கிறார்.
இரண்டு போட்டியாளர்களுக்கு இடையே ஒரு உச்சி மாநாட்டை தொடங்குவதற்கு தன்னை உயர்வாக கருதிக்கொள்ளும் போக்கும் சிறந்த வழியல்ல என்பதையே ஆக்ரா மாநாட்டில் இருந்து நாம் புரிந்துகொள்ள முடியும் என்று ஜஸ்வந்த் சிங் கூறுகிறார். “இத்தகைய ராஜிய சந்திப்புகள் ராணுவ சூழ்ச்சிகளின் பாணி மற்றும் நாகரீகத்திற்கு எளிதில் கைகொடுக்காது” என்று அவர் தனது சுயசரிதையில் எழுதினார்.
ஆனால், அதே ஆண்டில் நேபாளத்தில் நடைபெற்ற மாநாட்டில் வாஜ்பாயிக்கு முன்பாக போய் நின்று கை கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தியதாகவும் எழுந்து நின்று கை கொடுப்பதை தவிர அவருக்கு வேறு வழி அப்போது இல்லை என்றும் முஷாரஃப் எழுதியுள்ளார்.
இந்த ‘கைக்குலுக்கல் அதற்கான பலனை தந்தது’ என்று அவர் நம்பினார். ஜனவரி 2004 இல் உச்சிமாநாட்டிற்காக வாஜ்பாயி பாகிஸ்தானுக்கு சென்றார். மேலும் இரு தரப்பும் சமாதான செயல்முறையை முன்னோக்கி நகர்த்த முடிவு செய்தன. ஆனால், அந்த ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது.
அதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், நியூயார்கில் நடைபெற்ற ஐ.நா. உச்சிமாநாட்டையொட்டி இந்தியாவின் புதிய பிரதமரான மன்மோகன் சிங்கை முஷாரஃப் சந்தித்து பேசினார். 2005ல், இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை காண இந்தியாவுக்கு அவர் வந்தார். தலைவர்கள் சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்லவும், “தலைசிறந்த ” தீர்வு காணவும் ஒப்புக்கொண்டனர்.
2006ல், முஷாரஃபின் காஷ்மீர் பற்றிய நான்கு அம்சத் திட்டம் இந்தியாவுடனான முட்டுக்கட்டையை உடைப்பதற்கான நடைமுறை தீர்வு என பல நிபுணர்கள் கருதுகின்றனர். இருபகுதி மக்களும் சுதந்திரமாக சென்றுவர முடிந்தால், இந்தியா நிர்வகித்துவரும் காஷ்மீர் மீது உரிமை கோருவதை பாகிஸ்தான் நிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய அத்திட்டம், இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்துவதற்கான சிறந்த ஒன்றாகவும் இருக்கலாம்.
எனினும், முஷாரஃப் பற்றி இந்தியாவுக்கு வேறுபட்ட கருத்து உள்ளது. முஷாரப்பின் “பல அவதாரங்களை” கையாள்வது குறித்து தனது சுயசரிதையில் எழுதியுள்ள ஜஸ்வந்த்சிங், “அவர் அமைதியான மனிதரா? அல்லது சுய நிர்ணயத்திற்கான காஷ்மீரின் குரலை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவை திருப்திப்படுத்தும் அணுகுமுறையை எடுத்த ஒரு தந்திரமான ஜனரஞ்சகவாதியா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியாவை குறிவைக்கும் விதமாக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தது, அமெரிக்காவின் உதவியை திசை திருப்பியது என இந்தியா மீதான முஷாரஃப்பின் தீராத விரோதப் போக்கைப் பற்றி ஒருவர் பேசலாம். ஆனால், இந்தியாவுடன் சமாதானம் பேச வேறு எந்த பாகிஸ்தான் தலைவரையும் விட அவர் அதிகம் நெருங்கிவந்தார் என்பதை மறந்துவிடக் கூடாது” என்று வாஷிங்டனை தலைமையிடமாக கொண்ட ஆய்வுக் கழகமான வில்சன் மையத்தின் ஆசிய திட்டத்தின் துணை இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.
“2008ல் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் மற்றும் 2007ல் முஷாரப்பை ஆட்சியில் இருந்து அகற்றிய ஜனநாயக ஆதரவு இயக்கம் எதுவும் இல்லாதிருந்தால், இந்தியாவுடன் இணைந்து ஒரு சமாதான ஒப்பந்தந்தை அவரால் நன்றாக எழுதியிருக்க முடியும்.
அப்படி நடந்திருந்தால், முஷாரஃப் பற்றி நாம் இன்று வேறு விதமாக பேசிகொண்டிருப்போம்.” என்கிறார் குகல்மேன்.