;
Athirady Tamil News

தன் பாலின ஈர்ப்பாளர்களை டேட்டிங் செயலி மூலம் வேட்டையாடும் காவல்துறை – எப்படி நடக்கிறது?

0

எகிப்தில் தன்பாலின ஈர்ப்பு என்பது மிகவும் களங்கமான ஒன்றாகப் பார்க்கப்படுவதோடு தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆன்லைன் மூலம் போலீசார் வேட்டையாடி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாகவே உள்ளது.

காவல்துறை அதிகாரிகள் டேட்டிங் மற்றும் சமூக ஊடக செயலிகளை எவ்வாறு இதற்குப் பயன்படுத்துகின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் பிபிசியின் பார்வைக்கு வந்தன.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

எகிப்தில் வளர்ந்தவன் என்ற முறையில், சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பரவியுள்ள தன் பாலின ஈர்ப்பு குறித்து நான் அறிவேன். ஆனால், தற்போதைய சூழல் மிகவும் மோசமானதாக மாறியுள்ளதாகவும் தன்பாலின ஈர்ப்பு நபர்களை கண்காணிப்பதற்கான உத்திகள் மிகவும் நுட்பமானவையாக உள்ளதாகவும் சில நண்பர்கள் என்னிடம் கூறினர்.

எகிப்தில் தன்பாலின ஈர்ப்புக்கு எதிராக எந்தவித வெளிப்படையான சட்டமும் இல்லை. ஆனால், எல்ஜிபிடி சமூகத்தினர் மீது குற்றம் சுமத்த பாலியல் தொழிலுக்கு எதிரான சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதை எங்களின் விசாரணையில் கண்டறிந்தோம்.

போலீசார் சமர்ப்பித்துள்ள கைது தொடர்பான அறிக்கைகளில், ஆன்லைனில் துணையைத் தேடும் எல்ஜிபிடி மக்களுக்கு எதிராக அதிகாரிகள் இணையத்தை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்றும் ஒரு சில சம்பவங்களில் எல்ஜிபிடி மக்களுக்கு எதிராக ஆதாரங்களை எப்படி திரிக்கின்றனர் என்பதும் தெரிய வருகிறது.

தாங்கள் குறிவைத்த நபர்களுடன் போலீசார் எப்படி உரையாடலைத் தொடங்குகின்றனர் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

மேற்கு நாடுகளின் முக்கிய கூட்டாளியாக மத்திய கிழக்கில் எகிப்பு உள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவால் ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர்களை அந்நாடு பெற்று வருகிறது. ஆண்டொன்றுக்கு தோராயமாக 5 லட்சம் பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகள் எகிப்துக்கு செல்கின்றனர். மேலும், ஐ.நா.வின் வழியாக எகிப்திய போலீஸுக்கு பிரிட்டன் பயிற்சி வழங்குகிறது.

ஹூஸ்ஹியர் (WhosHere) எனப்படும் டேட்டிங் செயலியை பயன்படுத்தும் ஒரு பயனருக்கும் தனது அடையாளத்தை மறைத்து ரகசியமாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிக்கும் இடையிலான ஓர் உரையாடலில், அந்த அதிகாரி மற்றொரு நபரை நேரில் சந்திக்க அழுத்தம் கொடுப்பது தெரிகிறது. பின்னர், அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் அதிகாரி: நீங்கள் எந்த ஆணுடனாவது இதற்கு முன்பு உடலுறவு வைத்துள்ளீர்களா?

செயலி பயனர்: ஆம்

போலீஸ் அதிகாரி: நாம் நேரில் சந்தித்தால் என்ன?

செயலி பயனர்: ஆனால், நான் என் பெற்றோருடன் வசிக்கிறேன்

போலீஸ் அதிகாரி: பரவாயில்லை, கூச்சப்பட வேண்டாம், நாம் பொது இடத்தில் சந்திக்கலாம். பின்னர் என் அடுக்குமாடி குடியிருப்புக்குச் செல்வோம்.

இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன. ஆனால், அவை வெளிப்படையாக பிரசுரிக்க முடியாதவையாக உள்ளன.

எகிப்தில் தனக்கு ஏற்ற துணையை பொதுவெளியில் சந்திப்பது என்பது எல்ஜிபிடி சமூகத்தினருக்கு மிகவும் கடினமானது. எனவே, அங்கு டேட்டிங் செயலி இதற்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த செயலியை பயன்படுத்துவதாலேயே எகிப்தில் பொது ஒழுக்க சட்டம் அல்லது அதீத பாலுணர்வைத் தூண்டுதல் ஆகியவற்றின் கீழ் நீங்கள் கைது செய்யப்படலாம்.

இந்த விவகாரத்தில் எகிப்தியர்கள் மட்டுமே குறிவைக்கப்படுவதில்லை. ஓர் அறிக்கையில், வெளிநாட்டவர் ஒருவர் பற்றி போலீசார் குறிப்பிட்டுள்ளனர். அந்த நபரின் பெயர் மேட் என்று வைத்துகொள்வோம். காவலர் ஒருவர் அவருடன் உரையாடலை ஏற்படுத்திகொள்கிறார்.

பின்னர், மேட் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். தனது உடலை புகைப்படம் எடுத்து அனுப்பினார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய மேட், உடனடியாக தான் கைது செய்யப்பட்டதாகவும் அதீத பாலியல் இச்சைகொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு சில அறிக்கைகளில், புது நண்பர்களை ஏற்படுத்திகொள்ள செயலியை பயன்படுத்தியவர்களையும் பணத்திற்காக உடலுறவு வைத்துக்கொண்டதாக ஒப்புக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டதும் தெரியவருகிறது.

எகிப்தில் உள்ள சட்ட வல்லுநர்கள் இதுகுறித்துக் கூறுகையில், பணத்திற்காக உடலுறவு வைத்துக் கொள்வதை நிரூபிக்கும் பட்சத்தில், வழக்கு தொடர தேவையான பொறி அதிகாரிகளுக்குக் கிடைக்கிறது என்றனர்.

இத்தகைய அறிக்கையின் மூலம் நாம் கண்டறிந்த பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். அவர் பெயர் லைத் என்று வைத்துக் கொள்வோம். 2018, ஏப்ரல் மாதத்தில் நண்பரின் தொலைபேசி எண்ணில் இருந்து அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

“ஹலோ, எப்படி இருக்கிறாய்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் சந்திப்போமா என்று அவரது “நண்பர்” தகவல் அனுப்பியிருந்தார்.

ஆனால், நேரில் சந்திக்க லைத் சென்றபோது, அவரது நண்பரைக் காணவில்லை. அதற்கு பதிலாக போலீசை தான் அவர் சந்தித்தார். அவர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரு போலீஸ் அதிகாரி தனது கையில் சிகரெட் மூலம் சூடு வைத்ததாக லைத் தெரிவித்தார்.

“அந்த நேரத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட தோன்றியது” என அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய லைத், போலீஸார் அவரது பெயரில் போலியான கணக்கைத் தொடங்கினர் என்றும் அவரது புகைப்படம் ஆபாசமாக இருக்கும்படி எடிட் செய்தனர் என்றும் குற்றஞ்சாட்டுகிறார். இதேபோல், தான் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதாகக் கூறுவது போன்ற போலியான உரையாடலை போலீசார் உருவாக்கினர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் படங்கள் போலியானது என்பதற்கு அந்த படங்களே சான்று என்று லைத் கூறுகிறார். ஏனென்றால், அவரது கால்கள் ஒன்றைவிட ஒன்று பெரியது. ஆனால், புகைப்படத்தில் அப்படி இருக்கவில்லை. போலீசாரின் வழக்கு அறிக்கையின் நகலை மட்டுமே அணுகுவதற்கு பிபிசிக்கு அனுமதி இருந்ததால், அவர் கூறியவற்றை சரிபார்த்து உறுதி செய்ய முடியவில்லை.

இதேபோல் மேலும் மூன்று பேர், தங்கள் வழக்கிலும் போலீசார் கட்டாயப்படுத்தினர் அல்லது வாக்குமூலத்தில் மோசடி செய்தனர் என்று கூறினர்.

லைத் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மேல்முறையீடு செய்ததன் காரணமாக சிறைக்காலம் ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டது. மேலும், தனக்குத் தெரிந்த தன் பாலினத்தவர்களின் விவரங்களையும் தன்னிடம் இருந்து பெற போலீசார் முயன்றதாகவும் லைத் கூறுகிறார்.

“உனக்குத் தெரிந்தவர்களின் பெயரைக் கூறவில்லை என்றால் உன் மீதான மொத்த கதையையும் நாங்கள் திரித்துவிடுவோம்” என்று போலீசார் மிரட்டினார் என்றும் அவர் தெரிவித்தார்.

“தன்பாலின கூட்டங்கள்” என்று தான் குறிப்பிடுவதைக் குறி வைக்க ஆன்லைன் கண்காணிப்பைப் பயன்படுத்துவதைப் பற்றி எகிப்திய அரசாங்கம் பகிரங்கமாகப் பேசியுள்ளது.

கடந்த 2020இல், இணைய குற்றங்கள் மற்றும் மனித கடத்தல் விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சரின் முன்னாள் உதவியாளரான அகமத் தாஹிர், அஹ்ல் மஸ்ர் என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கூட்டு பாலின நிகழ்ச்சிகள், தன் பாலின கூட்டங்கள் குறித்து கண்காணிக்க மெய்நிகர் அனுபவம் மிக்க நபர்களை போலீஸ் துறையில் பணிக்கு எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டனின் வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் வளர்ச்சித் துறை அதிகாரி பிபிசியிடம் இதுகுறித்து கூறுகையில், விசாரணையில் கூறப்பட்ட கூற்றுகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக எகிப்திய காவல்துறையினருக்குப் பயிற்சி அளிக்க பிரிட்டனின் நிதி எதுவும் செல்லவில்லை என்றார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளி விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான லிசியா கியர்ன்ஸ் பிபிசியிடம் பேசுகையில், எகிப்து போன்ற நாடுகளில், எல்ஜிபிடி நபர்களின் பாலினமே அவர்களுக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து எல்ஜிபிடி பயணிகளுக்கு மேலும் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதாகக் கூறினார்.

இது தொடர்பாக எகிப்து அரசாங்கத்தின் கருத்தை அறிய பிபிசி தொடர்புகொண்டது. எனினும், அவர்கள் தரப்பில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

போலீஸ் பதிவு செய்த வழக்குகள் தொடர்பாக பிபிசிக்கு கிடைத்த அனைத்து குறிப்புகளிலுமே ஹூஸ்ஹியர் செயலி குறிப்பிடப்பட்டிருந்தது.

பயனர்களின் இருப்பிடம் போன்ற தகவல்களை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்யும் விதமாக ஹூஸ்ஹியர் செயலியில் குறைபாடு இருக்கலாம் என்று இணைய பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தனியுரிமை சட்டங்களை மீறுவதாகக் கருதப்படும் முறையில் ஹூஸ்ஹுயர் செயலி தரவுகளைப் பெறுகிறது மற்றும் சேகரிக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பிபிசி தரப்பில் தொடர்புகொண்ட பின்னர்தான், பயனர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் ‘ஒரே பாலினத்தை நாடுகின்றனர்` என்னும் தேர்வை நீக்கி செயலியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ஹூஸ்ஹியர்.

பிபிசி தரப்பில் கூறப்பட்ட பாதிப்புகளை மறுக்கும் ஹூஸ்ஹியர் செயலி, பிரச்னைகள் எழும்போது அவற்றை சரி செய்வதில் வலுவான பின்னணியை தாங்கள் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தது. மேலும், எகிப்தில் உள்ள எல்ஜிபிடி சமூகத்தினருக்காக எவ்வித பிரத்யேக சேவைகளையும் தாங்கள் வழங்கவில்லை என்றும் ஹூஸ்ஹியர் தெரிவித்தது.

எல்ஜிபிடி நபர்களைக் கண்டுபிடிக்க போலீஸும் குற்றவாளிகளும் பயன்படுத்தும் மற்றோரு செயலியான கிரிண்டர் தரப்பில் இது தொடர்பாகக் கூறுகையில், எகிப்தில் உள்ள எல்ஜிபிடி ஆர்வலர்கள், சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் இணைந்து தாங்கள் செயலாற்றுவதாகவும் அப்பகுதியில் உள்ள பயனர்களுக்கு பாதுகாப்பை பிரதானமாகக் கொண்ட தொழில்நுட்பங்கள் மூலம் சேவையாற்றுவதாகவும் தெரிவித்தது.

எல்ஜிபிடி நபர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் பயன்படுத்தும் அதே உத்தியை கிரிமினல் குழுக்கள் பயன்படுத்துகின்றன. பின்னர் அவர்களைத் தாக்கி இழிவுபடுத்துகின்றன. வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என்று கூறி அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கின்றன.

எகிப்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைரலான வீடியோவால் பாதிக்கப்பட்ட லைகா மற்றும் ஜமால் ஆகிய இருவரை என்னால் தொடர்புகொள்ள முடிந்தது. அந்த வீடியோவில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதோடு ஆடைகளை அவிழ்த்து, நடனமாடும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கத்தி முனையில் அவர்களின் பெயரைச் சொல்லும்படியும், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்பதை ஒப்புக்கொள்ளும்படியும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இந்த வீடியோவுக்கு பின்னால் உள்ள பக்கர் மற்றும் யாஹியா ஆகியோர் மிகவும் மோசமான நபர்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் கூறினர்.

பக்கர் மற்றும் யாஹியா தோன்றும் அல்லது அவர்கள் குரல் கேட்கும் வீடியோக்கள் குறைந்தது நான்கை நாங்கள் பார்த்தோம். எல்ஜிபிடி நபர்களை மிரட்டி, அவதூறாகப் பேசும் அவர்கள் இந்த வீடியோவை வாட்ஸ் ஆப், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர்.

ஒரு வீடியோவில் 18 வயதான தன் பாலின ஈர்ப்பாளர் சயீத், தன்னை பாலியல் தொழிலாளி என்று பொய்யாகக் கூறும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். அடுத்து என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நான் அவரைச் சந்தித்தேன். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தான் முடிவு செய்திருந்ததாகவும் ஆனால், `உங்கள் அடையாளத்தைக் கூறுவது என்பது நீங்கள் அனுபவித்த தாக்குதலைவிட கடும் குற்றமாகப் பார்க்கப்படும்` என்று கூறி தனது வழக்கறிஞர் அதைத் தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

சயீத் தற்போது தனது குடும்பத்தை விட்டு விலகியுள்ளார். அவர்களையும் மிரட்டும் முயற்சியில் அந்த கும்பல் வீடியோவை அனுப்பியபோது தன்னுடனான உறவை குடும்பத்தினர் துண்டித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

“இந்தச் சம்பவத்துக்கு பின்னர் நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். எகிப்தில் உள்ள என் நண்பர்களிடையே இந்த வீடியோ பரவியது.

நான் வெளியே செல்வதில்லை, என்னிடம் தொலைபேசியும் இல்லை. என்னைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது,” என்று சயீத் கூறுகிறார்.

பல்வேறு குழுக்களால் நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற ஏராளமான தாக்குதல்கள் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வெகு சிலரே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக நான் தகவல் சேகரிக்கும்போது, ஒரு குழுவின் தலைவன் தன் பாலின ஈர்ப்பாளர் என்பதும் தனது பாலியல் தொழில் தொடர்பாக இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவதும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன்னால் குறி வைக்கப்படுபவர்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பது அவருக்குத் தெரியும்.

இந்தச் சிக்கல்கள் குறித்துப் பேசுவது என்பது 2017ஆம் ஆண்டு முதல் எகிப்திற்கு உள்ளேயே தடைசெய்யப்பட்டுள்ளது, 2017ஆம் ஆண்டு முதல், நாட்டின் ஊடக ஒழுங்குமுறைக்கான உச்ச கவுன்சில் எல்ஜிபிடி பிரதிநிதித்துவத்தின் மீது ஊடக இருட்டடிப்பை விதித்தது. அவர்களின் நடத்தை முறையற்றது என்ற விதத்தில் மட்டுமே இந்த விவகாரத்தை அணுக அனுமதித்தது.

எகிப்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள LGBT சமூக ஆதரவாளர்களில் சிலர் எகிப்தில் உள்ள பிரச்னைகள் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமா அல்லது திரைக்குப் பின்னால் கையாளப்பட வேண்டுமா என்பதில் பிளவுபட்டுள்ளனர்.

ஆனால் லைலா, சயீத், ஜமால் மற்றும் லைத் ஆகியோர் இதுவரை தாங்கள் இருந்த நிழலில் இருந்து வெளியேறி தங்களது மௌனத்தைக் கலைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.