மூன்றாவாது முறையாக கிராமி விருது வென்றார் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்!!
பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்றால், இசைக் கலைஞர்களுக்குக் கிராமி. பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இந்திய இசைக் கலைஞர்கள் வரிசையில் கிராமி விருதை வென்றுள்ளார் ரிக்கி கேஜ். அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல மூன்று முறை.
ரிக்கி கேஜ் பிறந்தது அமெரிக்காவில். படித்தது, வளர்ந்தது வாழ்வது எல்லாம் பெங்களூருவில். பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், இந்துஸ்தானி இசையின் மீது கொண்ட தீராக் காதல் அவரை கிராமி விருதுவரை அழைத்து வந்திருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு வோடர் கெல்லர்மே எனும் தென் ஆப்பிரிக்க இசைக் கலைஞரோடு இணைந்து இவர் உருவாக்கிய ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) என்ற இசை ஆல்பத்துக்காகவே கிராமி விருதை வென்றிருந்தார். பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் அவர் அந்த விருதைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், Best Immersive Audio Album பிரிவில் டிவைன் டைட்ஸ் (Divine Tides) என்ற ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளார். இதன் மூலம் ரிக்கி கேஜ் 3 கிராமி விருது வாங்கிய ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போதுதான் எனது 3வது கிராமி விருதைப் பெற்றுள்ளேன். நன்றிகள். வார்த்தைகளற்று நிற்கிறேன். இந்த விருதினை இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்தில் 9 பாடல்களும், 8 இசை வீடியோக்களும் உள்ளன. உலகின் பல்வேறு இயற்கை பொக்கிஷங்களை இந்த ஆல்பம் காட்சிப்படுத்தியுள்ளது.