;
Athirady Tamil News

மஹிந்தவுக்கு சொல்லுங்கள் மூன்: ஞாபகமூட்டினார் மனோ!!

0

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த (13+) உடன்படுவதாகவும், அதேபோல் சர்வதேச மனித உரிமை நியமங்களை ஏற்று இலங்கையில் கடை பிடிப்பதாகவும் உலக மன்றமான ஐநாவுக்கு, அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஐநா செயலாளர் பாங்கி-மூன், என்ற தனக்கு உறுதி அளித்ததை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன முன்னணியின் அதிகாரபூர்வ தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது எம்பிகளுக்கும், இவர்களின் பின்னால் இன்னமும் நிற்கும் சில பெளத்த பிக்குகளுக்கும் ஞாபகப்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.

மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

இன்று, பொறுப்பை நிறைவேற்றாத தவறுகை செய்து, குற்றவாளி கூண்டில் நிற்பது அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல. ஒட்டு மொத்த ஐ.நா அமைப்பும் என நான் நம்புகிறேன். இவர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

பாங்கி-மூன் – மஹிந்த கூட்டறிக்கையில், கையெழுத்து இட்ட ஒரு தரப்பு வார்த்தை தவறுமானால், அடுத்த தரப்பு அதை தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பெயர்தான் கூட்டறிக்கை. ஆனால், அதை ஐ.நா செய்யவில்லை. அது மட்டுமல்ல, போர் நிகழ்ந்த போது, வன்னியில் இருந்த ஐ.நா அலுவலகத்தை இலங்கை அரசு சொன்னது, என்பதற்காக மூடி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய அன்றைய ஐ.நாவின் முடிவுக்கு முன்னாள் ஐ.நா செயலாளர் இந்த பாங்கி-மூன் பொறுப்பேற்க வேண்டும்.

அதனால்தான், இலங்கையின் இறுதி யுத்தம், சாட்சியமில்லா யுத்தமாக நிகழ்ந்தது. இன்று போர் முடிந்து ஏறக்குறைய 14ம் ஆண்டுகள் ஓடுகின்றன. முன்னாள் ஐ.நா செயலாளர் இலங்கை போர் தொடர்பில் அன்று உலக மாமன்றமான ஐ.நா சபை விட்ட தவறை இன்றாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் அதை பற்றி பேச வேண்டும். அது உலக அளவில் எடுபடும். அன்று இலங்கை யுத்தம் தொடர்பாக ஐ.நா விட்ட தவறு தொடர்பில் அன்றே ஐ.நா சபைக்குள் ஒரு உள்ளக அறிக்கை தயார் செய்யப்பட்டதை நான் அறிவேன். அது பற்றி, முன்னாள் ஐ.நா செயலாளர் பாங்கி-மூன் இனியாவது பகிரங்கமாக பேச வேண்டும். இலங்கையின் ஊடகவியலார்கள் பாங்கி-மூனை கண்டு இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், சந்திக்கும் நபர்களின் நிகழ்ச்சி நிரலில் நான் இல்லை. நான் அவரை கண்டால் இதை அவர் முகத்துக்கே சொல்லி கேட்க விரும்புகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.