தெலுங்கானா நிஜாமாபாத்தில் திடீர் நிலநடுக்கம்!!
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார்கள். அனைவரும் சாலையில் தஞ்சம் அடைந்தனர். வீட்டுச் சுவர்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சமீபகாலமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஜஹீராபாத் மண்டலம் பிலாபூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது.
பலத்த சத்தத்துடன் வீடுகள் குலுங்கியதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஓடினர். அதேபோல் கடந்த 2021, அக்டோபர் 2-ந் தேதி அன்று, ராம குண்டம், மஞ்சிரியாலா மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது நிலநடுக்கத்தின் அளவு 4.0 விக்டர் அளவுகோலாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி அடிலாபாத் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2021 நவம்பர் 1-ந் தேதி தெலுங்கானா, குமுரபிம் மாவட்டம் மற்றும் மான்சிரியாலா மாவட்டத்தில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்குள்ள பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்து வருகின்றனர். எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. எனவே புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் நில நடுக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.