தலைமறைவான ஆயுள் தண்டனை ரவுடி- 14 ஆண்டுக்கு பிறகு சிக்கினார்!!
சென்னை சாலிகிராமம், அடுத்த தசரதபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (வயது49) ரவுடி. இவர் கடந்த 1994-ம் ஆண்டு சீட்டு பணத் தகராறில் தனது தாயின் சகோதரரை கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில் சசிகுமார் உள்பட 5பேரையும் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கில் சசிகுமார் உள்பட 5 பேருக்கும் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2009-ம் ஆண்டு பரோலில் வந்த சசிகுமார் திடீரென தலைமறைவாகிவிட்டார் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை. இந்நிலையில் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சசிகுமார் தொடர்ந்து செல்போனில் பேசி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சசிகுமாரின் குடும்ப உறுப்பினர்களின் செல்போன் எண்ணை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது கோயமுத்தூர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரியில் படித்து வரும் மகனிடம் சசிகுமார் அடிக்கடி பேசி வருவது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சசிகுமாரை கைது செய்தனர். தலைமறைவான சசிகுமார் மேட்டுப்பாளையம் சென்று முதலில் டிராவல்ஸ் கார் ஓட்டி வந்தார்.
தற்போது படிப்படியாக உயர்ந்து அங்கிருந்து கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. சுமார் 14 ஆண்டுகள் போலீசுக்கு தண்ணி காட்டி வந்த சசிகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர்.