ஆம் ஆத்மி, பா.ஜ.க. அமளி எதிரொலி – மூன்றாவது முறையாக டெல்லி மேயர் தேர்தல் ரத்து!!
டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தேர்தல் நடந்தது. 7-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.வோ 104 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன. டெல்லி மாநகராட்சி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 6 மற்றும் 24-ம் தேதி நடக்க இருந்தது. ஆனால் 10 மூத்த உறுப்பினர்களுக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அப்போது மேயர் தேர்தல் நடைபெறாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது. கூட்டம் கூடியதும் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சத்ய சர்மா நியமன உறுப்பினர்களும், மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்தார். இந்த மூன்று தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடக்கும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த கவுன்சிலர் முகேஷ் கோயல் ஆல்டர்மென்கள் வாக்களிக்க முடியாது என்றார். இதையடுத்து ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.க. கவுன்சிலர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி, டெல்லி மேயர் தேர்தல் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டது.