;
Athirady Tamil News

புவி கண்காணிப்பு பணிக்காக செயற்கைக்கோளை 10-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்!!

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடையும், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 4 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட செயற்கை கோளை விண்ணில் செலுத்த முடியும். சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு எடை குறைந்த செயற்கை கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்களை இஸ்ரோ புதிதாக வடி வமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவும் ரூ.30 கோடிக்குள் அடங்கி விடும். அதன்படி சிறிய ரக 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் ராக்கெட்டின் சென்சார் செயலிழந்து, தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தபட்டதால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.வி. வகையில் புதிய ராக்கெட் தயாரித்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. அந்த வகையில் புதிதாக எஸ்.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட்டை இ.ஓ.எஸ்.-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களுடன் இந்த வாரம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ராக்கெட் ஏவுதலுக்கான முன்தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வானிலை சாதகமாக அமைந்தால் வருகிற 10-ந் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.

இதில் ஏவப்பட உள்ள இ.ஓ.எஸ்.-7 செயற்கைக்கோள் 334 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்பட உள்ளது என்றனர். முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இந்த முறை கூடுதல் கவனத்துடன் திட்டத்தை செயல்படுத்த விஞ்ஞானிகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.