;
Athirady Tamil News

‘தமிழை தேடி’ பிரசார பயணத்துக்கு அரசியலை கடந்து ஆதரவு தாருங்கள்: ராமதாஸ்!!

0

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்’ என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்களின் முதன்மை அடையாளம் தமிழ் மொழிதான். அந்த அடையாளத்தை நாம் இழந்து விட்டால், நம்மிடம் உள்ள அனைத்தையும் இழந்துவிடுவோம். இந்த அடிப்படை உண்மையை உணராமல் நம்மால் அன்னை தமிழை காக்க முடியாது. தமிழ் மொழிதான் நமது அடையாளம்; அதை எதற்காகவும் இழக்கக்கூடாது என்ற உணர்வு நமக்குள் உருவாகி விட்டால், தமிழ்மொழி தழைத்தோங்கிவிடும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், ஆலயங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்மை தான்.

இவற்றை மாற்றுவதற்கு பெரும் போராட்டங்கள் தேவையில்லை. ஒற்றை உறுதி ஏற்பு போதுமானது. அன்னை தமிழை யாரெல்லாம் மதிக்கவில்லையோ, அவர்களையெல்லாம் நாம் மதிக்கத்தேவையில்லை என்று உறுதிமொழியேற்றுக்கொண்டால் போதுமானது. நமது துணையும், ஆதரவும் எங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம் தமிழ் செழிக்கத்தொடங்கிவிடும்.

அதனால் அன்னை தமிழை மீட்பதற்கான முயற்சி நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். அதன்பிறகு நாம் கொடுக்கும் அழுத்தத்தால் அனைத்து இடங்களிலும் அன்னை தமிழ் அரியணை ஏறும் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. ‘தமிழ் கூறும் நல்லுலகு’ என்பதுதான் நாம் வாழும் மண்ணுக்கான பெருமை. அதுதான் நமது அடையாளம். அந்த பெருமை இப்போது நமது மண்ணுக்கு இருக்கிறதா? என்ற ஐயம் என்னை வாட்டுகிறது. அந்த பெருமையை மீண்டும் அடையவேண்டும் என்ற வேட்கை என்னுள் துடித்துக்கொண்டிருக்கிறது. இது குறித்தெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் ‘தமிழை தேடி…’ என்ற தலைப்பில் உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ந் தேதி சென்னையில் தொடங்கி பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.

8 நாட்கள் நடைபெறும் இந்த பயணம் வரும் 28-ந் தேதி மாலை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நிறைவடைகிறது. அன்னை தமிழைக் காப்பதற்காக நடத்தப்படும் இந்த பயணத்தில் அரசியலுக்கு இடமில்லை. பிரிக்கும் அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, மொழிக்காக நாம் இணைவோம்.

அரசியல், மதம், சாதி உள்ளிட்ட அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழ் மொழியை காப்பதற்காக நடத்தப்படும் தமிழை தேடி பரப்புரை பயணத்தில் அனைவரும் வாய்ப்புள்ள இடங்களில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அன்னை தமிழை காக்க அனைவரும் கைகோர்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.