பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!
முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.
நெருக்கடிக்குப் பின்னரான பிரச்சினைகளைத் தீர்க்க, மக்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் மையப்படுத்திய மூலோபாயத்துடன் முன்நோக்கி நகரும் வகையிலான 27 பரிந்துரைகள் இந்த வரைவு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் நிறுவனத் திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்தப் பரிந்துரைகளின் சுருக்கம், இறுதி அறிக்கை முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுதலை பூச்சியமாக்கல் கொள்கையை அறிவிப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் தவறுகளை செய்யாமல் இருப்பதற்கான உத்தரவாதம் பெறப்பட வேண்டும் என்றும் ஆணையத்தின் பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.