ஆஸ்திரேலியாவில் புத்த கோவிலில் தீ விபத்து!!
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலைநகர் மெல்போர்னில் புத்த கோவில் ஒன்று உள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கோவில் உள்ளூர் புத்த சமூகத்தினர் இடையே பிரபலமான வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலில் திடீரென தீப்பிடித்தது.
மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுபற்றி மெல்போர்ன் நகர போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.