30 நிமிட பிரசாரத்துக்கு செல்லும் பொதுமக்களுக்கு ரூ.300 கொடுக்கும் அரசியல் கட்சியினர்!!
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல்வேறு இடங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். தினமும் காலை 6மணி முதல் இரவு 10 மணி வரை அவர்கள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த தேர்தலில் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்த மாவட்டத்தில் இருந்து கட்சியினரை வரவழைத்து உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். எப்படியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் அதிக ஓட்டுகள் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் குறிப்பிட்ட பகுதிக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தினமும் அந்த பகுதியை சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இதனால் தொழிலாளர்களை கவர அரசியல் கட்சியினர் தினமும் ஒவ்வொரு வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரசாரத்துக்கு வரும் அனைத்து கட்சியினரையும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். குறிப்பாக சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை ஓட்டு கேட்டு வரும் பிரமுகர்களுக்கு கும்பமரியாதை, மலர் தூவ, ஆரத்தி எடுத்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் இதற்காக பெண்கள் தயாராக இருக்கிறார்கள். மேலும் எந்த அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்ய வருகிறார்களோ அவர்களை வரவேற்க அந்த கட்சிகளின் சின்னத்தையும் வரைந்து அரசியல் கட்சியினரையே பிரமிக்க வைக்கின்றனர். எந்த கட்சியினர் வந்தாலும் பொதுமக்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்று வருகிறார்கள்.
மொத்தத்தில் இடைத்தேர்தல் பொதுமக்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்து இருக்கிறது. ஒரு சிலர் பிரசாரத்துக்கு கூட்டத்தை காட்ட வித்யாசமான முறையை கையாண்டு வருகின்றனர். பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு முதலில் புதிய 20 ரூபாய் டோக்கனாக கொடுக்கப்படுகிறது. பின்னர் அவர்களிடம் கட்சி கொடி, சின்னம் கொடுக்கப்பட்டு பிரசாரத்துக்கு அழைத்து செல்கிறார்கள். சுமார் 30 நிமிட நேரத்தில் பிரசாரம் முடிந்ததும் மீண்டும் அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். தொடர்ந்து பிரசாரத்துக்கு வந்த பொதுமக்களின் வீடுகளுக்கு செல்லும் வெளியூர் கட்சியினர், உள்ளுர் பிரமுகர்களுடன் டோக்கனாக கொடுத்த புதிய 20 ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்டு ரூ.300 கொடுத்து வருகிறார்கள்.
அரசியல் கட்சியினரின் வருகையால் டீக்கடைகளில் டீ, போண்டா, வடை விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. இதேபோல் அசைவ ஓட்டல்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தோட்டத்துக்குள் கிராமிய சமையல்கள் செய்யப்படுகிறது. அங்கும் அரசியல் கட்சியினர் கூட்டம் அலைமோதுகிறது. ஈரோடு மாநகரில் எங்கு பார்த்தாலும் சொகுசு கார்களாவே தென்படுகிறது. இதனால் மாநகர் பகுதியில் எப்போது பார்த்தாலும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படுகிறது.