காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய அரசு நர்சு!!
கண்முன்னால் ஒருவர் உயிருக்கு போராடினால் கூட நமக்கேன் வீண் வேலை என்று அந்த இடத்தைவிட்டு கடந்து செல்பவர்கள்தான் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் விஜயா நிர்மலா சிவா போன்ற மனிதாபிமானமும், பணியின் மீதான அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரவு 7.30 மணி… காஞ்சிபுரம் பஸ் நிலையம் பரபரப்பாக இருந்தது வேலைகளுக்கு சென்று விட்டு வீடு திரும்புபவர்கள் பஸ்களை பிடிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவராகத் தான் நிர்மலாவும் பஸ்சை பிடிப்பதற்காக ஓடி கொண்டிருந்தார். 35 வயதாகும் நிர்மலா கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர். காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார். 2-வது ஷிப்டு முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விசாரணை அலுவலகம் அறைக்கு அருகில் ஓய்வு பெற்ற பஸ் டிரைவர் ராஜேந்திரன் (68) திடீரென்று கீழே மயங்கி சாய்ந்துள்ளார்.
உயிருக்கு போராடிய அவரை சுற்றி நின்றவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்து கொண்டிருந்தார்கள். கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே சென்ற நிர்மலா உயிருக்கு போராடிய அவரை பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் முதலுதவி சிகிச்சை செய்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு ராஜேந்திரன் மூச்சு விட தொடங்கினார். உடனே தனது சக ஊழியர்களை தொடர்புகொண்டு அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். தக்க தருணத்தில் சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். நிர்மலாவின் மனித நேய உதவியை பலரும் பாராட்டினார்கள்.
நவீன செவிலியர் முறையை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் மகத்தான சேவை தான் உலகம் முழுவதும் செவிலியர்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. இக்கட்டான நேரங்களில் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதே செவிலியரின் கடமை அந்த கடமையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த நிர்மலா சக ஊழியர்களாலும் பாராட்டப்பட்டார்.