ஈரோட்டில் தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா- தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பரபரப்பு புகார்!!
சென்னை கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சுதந்திரமாக, ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அங்கு தி.மு.க.வினர் தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டு வாடா தீவிரமாக செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம்.
எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் இடையூட்டு மனு தாக்கல் செய்து இரட்டை இலையை பெற்று இருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வின் பி. டீமாக செயல்பட்டு இரட்டை இலையை முடக்க முயற்சி செய்தார். அது முடியவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கோவிலாக கருதப்படும் தலைமை கழகத்தை ஓ.பி.எஸ். காலால் மிதித்து கலங்கப்படுத்தினார். அவர் தி.மு.க.வை சார்ந்து இருக்கிறார். அதனால் தொண்டர்கள் அவரை ஏற்க மாட்டார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி.
அந்த அடிப்படையில் மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ். ஓட்டு கேட்பாராம். ஆனால் வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்ல மாட்டாராம். இதிலும் அவர் முரண்பாடாக செயல்படுகிறார். “ச்சீ… ச்சீ… இந்த பழம் புளிக்கும்” என்பது போல ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.