சட்ட நடைமுறைகளை கோட்டா பின்பற்றவில்லை !!
பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர், பொது மன்னிப்பு வழங்கியமையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனுக்கள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர, அர்ஜுன ஒபேசேகர ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பொது மன்னிப்பு வழங்குவதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நடைமுறைகளை பின்பற்றிவில்லை என்றும் வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்றும் மன்றுக்கு அறிவித்தார்.
குறித்த பொதுமன்னிப்பை வலிதற்றதாக்கும் அதிகாரம் மன்றுக்கு இருப்பதாகவும் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
மேலும் பொதுமன்னிப்பு வழங்கும் போது சட்டமா அதிபரின் அறிக்கை கோரப்படவில்லை என்று சுமனா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தார்.
மனுமீதான மேலதிக விசாரணைகள் மார்ச் 20,23,28ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.
2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் அவரது மெய்பாதுகாவலர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் எம்.பியான துமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதியன்று கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பளித்தது.
மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக துமிந்தவினால் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதியன்று உயர்நீதிமன்றத்தின் 5 நீதியரசர்கள் கொண்ட அமர்வு மரண தண்டனையை உறுதி செய்திருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2021ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதியன்று துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருந்ததுடன், அவருக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பதவி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.