;
Athirady Tamil News

இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து தெருவில் நிற்கும் துருக்கி மக்கள் !!

0

பூகம்பத்தால் உருக்குலைந்து கிடக்கும் துருக்கி மற்றும் சிரியாவில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் தொடர்பான காட்சிகள் மனதை உலுக்குவதாக உள்ளன. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், எங்கும் மரண ஓலங்கள், தோண்ட தோண்ட பிணங்கள் என கடந்த 3 நாட்களாக மயான பூமியாக காட்சியளிக்கிறது துருக்கி. ஒருபுறம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடி வரும் ஏராளமானவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

தெற்கு துருக்கிய நகரமான ஹட்டேவில் பாகிஸ்தான் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் இருந்த போது இடிபாடுகளில் சிறுவன் ஒருவன் சிக்கி இருப்பதை கண்டனர். உடனடியாக சிறுவனுக்கு தண்ணீர் அளித்த வீரர்கள் அவனை பத்திரமாக மீட்டனர். 45 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர் பிழைத்திருந்த அந்த சிறுவானின் பெயர் முகமது அகமத் என்றும் சிரியாவில் இருந்து அகதியாக துருக்கிக்கு வந்தவன் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹட்டே மாகாணத்தின் முக்கிய குடியிருப்பு பகுதியான 21-ம் எண் தெருவில் நிலநடுக்கத்தால் குடும்பத்தை இழந்த பலர் அடுத்து எங்கு செல்வது என தெரியாமல் சுற்றி திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இது ஒருபுறம் இருக்க நிலநடுக்கத்தின் எந்த பாதிப்பையும் அறியாமல் இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு சிறுவர்கள் விளையாடும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன.

காசியான்பெட் மாகாணத்தில் இடிந்த கட்டிடங்களுக்கு இடையே சிக்கி இருந்த முதியவரை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒருவரை உயிருடன் மீட்டதால் உணச்சிவசப்பட்ட மீட்பு குழுவினரும், பொது மக்களும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தெற்கு துருக்கியில் நிலநடுக்க ஏற்பட்ட 24 மணி நேரத்திற்கு பின் அந்த இடிபாடுகளுக்கு இடையே சிறுவன் ஒருவன் தூங்கி கொண்டிருந்ததை கண்ட மீட்பு குழுவினர் அவனை தட்டி எழுப்பினர். அந்த சூழலை புரியாத சிறுவன் என்ன நடக்கிறது என கேட்டதும் காலை வணக்கம் கூறிய வீரர்கள் அவனை மீட்டனர்.

சிரியாவின் இட்லிப் நகரில் சிரியா சிவில் டிபென்ஸ் தன்னார்வ அமைப்பினர் 2 சிறுமிகள் மற்றும் 1 சிறுவன் மற்றும் அவர்களது பெற்றோரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் இருந்து ஒரு குடும்பமே உயிருடன் மீட்கப்பட்டதை கண்டு அங்கு இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வடமேற்கு சிரியாவில் தொப்புள் கொடி தாயுடன் பிணைக்கப்பட்ட நிலையில் குழந்தை ஒன்றை கண்டனர். இடிபாடுகளில் சிக்கி குழந்தையை பிரசவித்த பெண் உயிரிழந்த நிலையில் உயிருடன் இருந்த குழந்தைக்கு தொப்புள் கொடியை அகற்றிய மீட்பு படையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.