ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்- மத்திய மந்திரி தகவல்!!
ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் உயிரை மாய்த்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக சட்டசபையில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இந்த சட்ட மசோதா கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு கவர்னர் முதலில் கையெழுத்திடவில்லை. பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் இது தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் சில விளக்கங்களை கேட்டு பின்னர் அந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா?
என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து பேசினார். ஆன்லைன் சூதாட்டம் மாநில எல்லைகளை கடந்த பிரச்சினை என்பதால் மத்திய அரசு சட்டம் இயற்றுவது சரியாக இருக்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும். இவ்வாறு அவர் பேசினார்.