தலித் திருமண விழாவில் விலை உயர்ந்த ‘பைக்’ பரிசு வழங்கியதற்கு மிரட்டல் – போலீஸ் பாதுகாப்பு கேட்டு மணமகள் குடும்பத்தினர் மனு!!
உத்தரபிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷிபால் வால்மிகி-ஷீலாதேவி தம்பதியினரின் மகள் கவிதாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. தலித் சமூகத்தை சேர்ந்த இந்த குடும்பத்தினரின் திருமண விழாவின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மணமக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல விலை உயர்ந்த மேலும் சில பரிசுகளையும் குடும்பத்தினர், உறவினர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த அப்பகுதியில் உள்ள மேல் ஜாதியினர் மணப்பெண்ணின் பெற்றோர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரிஷிபால் வால்மிகி-ஷீலாதேவி தம்பதியினர் திருமண விழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு உள்ளூர் போலீசில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், உள்ளூர் கிராமத்தலைவர் தங்களை உயர்ஜாதி குடும்பங்கள் செய்வது போல் நீங்களும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கக்கூடாது என்று மிரட்டினார்.
மீறினால் திருமண ஊர்வலத்தின் போது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்றும் எச்சரித்தார். எனவே திருமண விழாவிற்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டது.