உத்தரபிரதேசத்தில் 50 ஆண்டுகளாக கருவூலத்தில் கிடக்கும் இந்திரா காந்தியின் வெள்ளி பரிசு!!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு கிராம மக்கள் பரிசாக வழங்கிய 73 கிலோ எடை கொண்ட வெள்ளி உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கருவூலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கருவூல அதிகாரி சூரஜ்குமார் கூறியதாவது:- கடந்த 1972-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரபிரதேசம்- உத்தரகாண்ட் எல்லையில் கட்டப்பட்ட கலகர் அணையை பார்வையிடுவதற்காக வந்திருந்தார்.
அவர் அணை பகுதியில் வந்த போது உள்ளூர் மக்கள் இந்திரா காந்திக்கு 73 கிலோ எடை உள்ள ரூ.51 லட்சம் மதிப்புள்ள வெள்ளியை பரிசாக வழங்கினர். மேலும் உலோகத்தால் செய்யப்பட்ட ஏராளமான பொருட்களையும் இந்திரா காந்திக்கு பரிசாக அளித்தனர். ஆனால் அந்த பொருட்களை இந்திரா காந்தி எடுத்து செல்லவில்லை. அவர் அப்போதைய கலெக்டரிடம் அதை கவனித்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார். அவர் அந்த பரிசு பொருட்களை கருவூலத்தில் பாதுகாத்தார். அப்போதில் இருந்து இன்று வரை அந்த பரிசு பொருட்கள் கருவூலத்தில் தான் இருக்கிறது.
அவற்றை என்ன செய்வது என்று சரியான வழிகாட்டுதல் இல்லை என்றார். கடந்த 2002-ம் ஆண்டில் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் பாரத ரிசர்வ் வங்கிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் அந்த பரிசு பொருட்கள் தனியார் சொத்து என்று கூறி அவற்றை கையகப்படுத்த மறுத்துவிட்டது. காந்தி குடும்பத்தினர் உரிமை கோரினால் மட்டுமே நடைமுறைகளை பின்பற்றி இந்த பரிசு பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பரிசு பொருட்களை வருடாந்திர ஆய்வின் போது தவறாமல் சரிபார்க்கப்படுகிறது. இந்த பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களால் உரிமை கோரப்பட்டால் அவற்றை அவர்களிடமே ஒப்படைக்கலாம் என்றார்.